

அதிமுக அமைச்சர்கள் பயந்து போயுள்ளனர். அனைவரின் மீதும் குட்கா ஊழல் போன்ற வழக்குகள் உள்ளன என்று கனிமொழி எம்.பி. பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகள் தொடங்கிவிட்டன. இதில் திமுகவைச் சேர்ந்த கனிமொழி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களுடைய பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். அடுத்த மாதம் திமுக தலைவர் ஸ்டாலினும் தன்னுடைய பயணத்தைத் தொடங்கவுள்ளார்.
திமுக தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரத்தில், தற்போதைய அதிமுக ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். இதற்கு அதிமுக தரப்பிலிருந்து 2ஜி வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டால் கனிமொழி மற்றும் ஆ.ராசா ஆகியோர் சிறைக்குச் செல்வார்கள் எனப் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு கனிமொழி எம்.பி. பேட்டி அளித்துள்ளார். அதில் "அடுத்த ஆண்டு தேர்தலில் 2ஜி வழக்கு திமுகவுக்கு ஒரு பிரச்சினையாக இருக்குமா?" என்ற கேள்விக்கு கனிமொழி கூறியிருப்பதாவது:
"என் மீது வைக்கப்பட்ட எந்த ஒரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது. அக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் கற்பனையே. அவை மீண்டும் ஒரு பிரச்சினையாக உருவெடுக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதிமுக அமைச்சர்கள் பயந்து போயிருப்பதால் அந்தப் பிரச்சினையை எழுப்புகிறார்கள். இப்பிரச்சினையை எழுப்ப முயலும் அனைவரின் மீதும் குட்கா ஊழல் போன்ற வழக்குகள் உள்ளன."
இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.