சாதிவாரியான புள்ளி விவரங்கள் சேகரிக்க ஆணையம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சாதிவாரியான புள்ளி விவரங்கள் சேகரிக்க ஆணையம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
Updated on
1 min read

அரசின் பல்வேறு நலத்திட்டப் பயன்கள் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளை எதிர்கொள்ளத் தேவையான புள்ளி விவரங்களைப் பெறுவதற்காகவும் சாதிவாரியான புள்ளி விவரங்களைச் சேகரிக்க நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்த உத்தரவு அரசாணையாக வெளியிடப்பட்டது.

இதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலகட்டங்களில் வைத்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் அரசின் பல்வேறு நலத்திட்டப் பயன்கள் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளை எதிர்கொள்ளத் தேவையான புள்ளி விவரங்களைப் பெறுவதற்காகவும், "தற்போதைய நிலவரப்படியான சாதிவாரியான புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளைச் சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும்" எனக் கடந்த கடந்த 1-ம் தேதி அன்று தமிழக அரசால் உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து "தற்போதைய நிலவரப்படி சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விவரங்களை (Quantifiable data) சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, அப்புள்ளிவிவரங்களைத் திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்" என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆணையம் உடனடியாகச் செயல்பாட்டுக்கு வருவதோடு விரைவில் அதன் பணியையும் தொடங்கும்.

"சமூக நீதி காத்த வீராங்கனை" ஜெயலலிதா வழியில் செயல்படும், இவ்வரசு சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in