

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 96 வயதான பெரியாரிய அறிஞரும்,மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவருமான வே.ஆனைமுத்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரம்பலூர் அருகே முருக்கன்குடி என்ற கிராமத்தில் 21-6-1925-ல்வேம்பாயி - பச்சையம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் ஆனைமுத்து. தனது 19-வதுவயதில் பெரியாரின் சொற்பொழிவைக் கேட்டு அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அன்று முதல்பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதே அவரது வாழ்க்கையானது. ஆனைமுத்துவின் மனைவிசுசீலா அம்மையார் 3 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இவருக்கு 4 மகன்கள். 2 மகள்கள். தற்போது சென்னையில் மூத்த மகன் பன்னீர்செல்வத்துடன் வசித்துவருகிறார்.
பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப 1950-ம் ஆண்டில் ‘குறள் மலர்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். பின்னர் ‘குறள் முரசு’, ‘சிந்தனையாளன்’ ஆகிய பத்திரிகைகளை தொடங்கியவர், இன்றுவரை ‘சிந்தனையாளன்’ இதழை நடத்தி வருகிறார். 1957-ல் அரசியல் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு 18 மாதங்கள்வேலுர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெரியாருக்கு நெருக்கமாக இருந்த வே.ஆனைமுத்து, பெரியார் இருந்தபோதே அவரது பேச்சுகள், எழுத்துகளை தொகுத்துநூலாக்கும் பணியைத் தொடங்கினார். ‘சிந்தனையாளர்களுக்கு சீரியவிருந்து’, ‘தீண்டாமை நால்வருஎம்.ணம் ஒழிப்போம்!’, ‘பெரியார் கொள்கைகள் வெற்றிபெற பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன?’, ‘விகிதாச்சார இடஒதுக்கீடு செய்!’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
‘பெரியார் - ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ என்று பெரியாரின் சொற்பொழிவுகளையும், எழுத்துகளையும் தொகுத்து வெளியிட்டார். இது தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தொகுப்பை விரிவாக்கம் செய்து சமீபத்தில் 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.
பெரியார் மறைவுக்குப் பிறகு 1976-ல் ‘பெரியார் சம உரிமைக் கழகம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். 1988-ல் இந்த அமைப்பை ‘மார்க்சிய, பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி’ என்று மாற்றி இன்றுவரை அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தோடு நிற்காமல் பெரியாரிய கருத்துகளைப் பரப்ப நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்துவந்தார். தமிழகத்தைப் போல வடமாநிலங்களிலும், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய், பாபு ஜெகஜீவன் ராம், ஜெயில்சிங், வி.பி.சிங்,கன்சிராம் என்று பல்வேறு தலைவர்களை சந்தித்து வலியுறுத்தினார். டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருத்தரங்குகளை நடத்தினார்.
பிஹாரில் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது, மண்டல் கமிஷன் உருவாக்கம், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதஇடஒதுக்கீடு, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது, வட மாநிலங்களில் பெரியார் நூற்றாண்டு விழாவை நடத்தியது என்று வே.ஆனைமுத்துவின் சாதனைகளை பெரியாரிய சிந்தனையாளர்கள் பட்டியலிடுகின்றனர்.
கடந்த 77 ஆண்டுகளாக பெரியாரின் சிந்தனைகளை பரப்பிவரும் வே.ஆனைமுத்து, கரோனாபாதிப்பால் கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின்சென்னை மாவட்டச் செயலாளர்வாலாசா வல்லவனிடம் கேட்டபோது, “வயிற்றுப்போக்கு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. அதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது.96 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கியவர். கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட, சிதம்பரத்தில்கட்சியின் மாவட்டச் செயலாளர் இல்ல திருமண விழாவில் பங்கேற் றுப் பேசினார்” என்றார்.
கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு, பெரியார் கருத்துகளைப் பரப்ப வே.ஆனைமுத்து விரைவில்வருவார் என்று பெரியாரிய சிந்தனையாளர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.