சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் பாதிப்பை மத்திய குழு ஆய்வு; பல இடங்களில் பொதுமக்கள் முற்றுகை: நாளை முதல்வருடன் சந்திப்பு

’நிவர்’ புயலால் ஏற்பட்ட மழை பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தனர். படம்: எம்.முத்துகணேஷ்
’நிவர்’ புயலால் ஏற்பட்ட மழை பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தனர். படம்: எம்.முத்துகணேஷ்
Updated on
2 min read

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் ‘நிவர்’ புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த 8 பேர் அடங்கிய மத்திய குழு, இரண்டாகப் பிரிந்து ஆய்வு மேற்கொண்டது. நேரடி யாக குறைகளை கேட்கவில்லை என பல்வேறு இடங்களில் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். புதுவை பகுதிகளில் இன்று ஆய்வு நடத்தும் அதிகாரிகள் நாளை முதல்வர் பழனிசாமியை சந்திக்கின்றனர்.

வங்கக் கடலில் கடந்த 23-ம் தேதி உருவான நிவர் புயல் கடலூர் அருகில் கரையைக் கடந்தது. தொடர்ந்து, சமீபத் தில் உருவான புரெவி புயல் தமிழகத் தில் கரையை கடக்காமல் வலுவிழந்த போதும் பரவலாக கனமழை பெய் துள்ளது.

இந்நிலையில், நிவர் புயல் பாதிப்பு களை ஆய்வு செய்ய நேற்று முன் தினம் மத்திய உள்துறை இணை செயலர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட மத்திய குழுவினர் சென்னை வந்தனர். தொடர்ந்து தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் வருவாய்த் துறை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோருடன் ஆலோசனை நடத் தினர். அப்போது அவர்களிடம் உடனடி நிவாரணமாக ரூ.650 கோடி மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ரூ.3,108 கோடி என ரூ.3,758 கோடி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்ந்து, இன்று காலை மத்திய குழுவினர் 2 குழுக்களாக பிரிந்தனர். மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் வேளாண் எண்ணெய் வித்துத்துறை இயக்குநர் மனோகரன், மீன்வள மேம்பாட்டு ஆணையர் பால் பாண்டியன், சாலை போக்குவரத்து அமைச்சக மண்டல அதிகாரி ரணன் ஜெய் சிங் ஆகியோர் அடங்கிய குழு வினர் முதலில் சென்னை புறநகர் பகுதிகளான வேளச்சேரி ராம்நகர், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்தனர். அப் போது பொதுப்பணி மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பாதிப்புகளை விளக்கினர். செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு அருகில் நூக்கம்பாளையம் பாலம் அருகில் செங்கல்பட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத் தினர்.

தொடர்ந்து, தாம்பரம் சென்ற அவர் கள் முடிச்சூர், பெருங்களத்தூர், வரத ராஜபுரம், அடையாறு ஆற்றினை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, செங்கல் பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மழைநீர் வடிவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கினார்.

அதன்பின், தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தை ஆய்வு செய்த மத்திய குழுவினர், திருக்கழுக்குன்றம் ஒன்றி யத்தில் பூந்தண்டலம், இரும்புலிச்சேரி மற்றும் சித்தாமூர் ஒன்றியம் வெடால் கிராமத்தில் சேதமடைந்த நெற்பயிர்கள் மற்றும் விளைநிலங்களை பார்வை யிட்டு விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

அதன்பின், பாலாற்றங்கரையோர பகுதிகளில் வெள்ளத்தால் சேத மடைந்த விளை நிலங்கள் மற்றும் சாலைகள், சிறிய மேம்பாலங்களை பார்வையிட்டனர். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மற்றொரு குழு

இதேபோல் தமிழக பொதுப்பணித் துறை செயலர் கே.மணிவாசன் வழி காட்டுதலில், மத்திய நீர் ஆணைய இயக்குநர் ஜெ. ஹர்ஷா தலைமையில், மத்திய நிதி செலவினங்கள் துறை துணை இயக்குநர் அமித் குமார், மின் துறை துணை இயக்குநர் ஓ.பி.சுமன், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் தர்மவீர் ஜா ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர், சென்னை மாநகராட்சி யின் ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டிய வேப்பேரி அழகப்பா சாலை, ஜோதி வெங்கடாச்சலம் சாலை பகுதிகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரில் மழைநீர் தேங்கிய பகுதிகள், காசிமேடு மீன்பிடி துறை முகத்தில் புயலால் படகுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டனர். எண்ணூர் முகத்துவாரப் பகுதியில், கொசஸ்தலை ஆறு கடலில் இணையும் இடத்தை பார்வையிட்டு, கடலில் கலந்த மழைநீரின் அளவு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந் தனர்.

அதன்பின், திருவள் ளூர் மாவட்டத்தில் அத் திப்பட்டு புதுநகர், நெய்த வாயல் பகுதிகளில் பயிர் சேதத்தை ஆய்வு செய்தனர். வஞ்சிவாக்கம் பகுதியில் ஆரணியாற்றின் கரை உடைந்து, நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய பகுதிகளையும் ஆவடி -பருத்திப்பட்டு ஏரி உபரி நீர் கால்வாய் மற்றும் அதன் கரையோரம் உள்ள வசந்தம் நகரில் உபரி நீர் சூழ்ந்த பகுதிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது பேசிய திருவள் ளூர் ஆட்சியர் பொன்னையா, திருவள் ளூரில் 3,840 ஹெக்டேர் நெற்பயிர்கள், 571 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பெரும்புதூர் வட்டத்தில் சந்தவேலூரில் சேதமான வாழைகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு, முடிச்சூர் உள்ளிட்ட சில இடங்களில் பொதுமக்களிடம் கோரிக்கைகளை நேரடியாக கேட்கா மல் பாதிப்பு படங்களை மட்டும் அதி காரிகள் பார்வையிட்டனர். இதனால் பொதுமக்கள் அதிருப்தியடைந்து அவர் களை முற்றுகையிட்டனர். ஆவேசமாக வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இத னால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, மத்திய குழுவின் முதல் பிரிவினர் புதுச்சேரியில் இன்று பாதிப்புகளை பார்வையிட்டு பிற்பகல் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு செல்கின் றனர். அதேபோல், 2- வது குழுவினர் காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர், திருப் பத்தூரில் பாதிப்புகளை ஆய்வுசெய் கின்றனர். பின்னர் 2 குழுக்களும் இரவு சென்னை திரும்புகின்றன.

நாளை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து விட்டு, பகலில் டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in