

கேரளாவில் சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் சபரிமலை மற்றும் அதனையொட்டிள்ள வனப் பகுதியில் உள்ள யானைகள், வால்பாறை வனப் பகுதிக்கு இடம்பெயர தொடங்கியுள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆனைமலை மற்றும் கேரளா மாநில எல்லையொட்டிய பகுதிகளில் மொத்தம் 400-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இவை ஓரிடத்தில் நிலையாக இல்லாமல், ஆண்டு முழுவதும் இடம்பெயர்வதை வழக்கமாக கொண்டுள்ளன. தமிழகம்-கேரளா இடையே உள்ள பல்வேறு வழித்தடங்களில் இடம்பெயர்கின்றன.
வனத் துறையினரின் கணக்கெடுப்பின்படி, சபரிமலை வனப்பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் காரணமாக, கேரளாவில் உள்ள யானைகள், கேரளாவின் உள்பகுதி வனத்துக்கு செல்லாமல் திசை மாறி நவம்பர், டிசம்பர் மாதங்களில் வால்பாறை வனப்பகுதிக்கு இடம்பெயர்வது தெரியவந்தது.
இந்நிலையில் குரங்குமுடி, உருளிக்கல், அக்காமலை, சின்னகல்லாறு, கருமலை, அய்யரபாடி மற்றும மானாம்பள்ளி பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் யானைகளின் நடமாட்டம் காணப்படுவதால், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
டிசம்பர் மாதம் யானைகளின் இனப்பெருக்கம் காலம் என்பதால் கேரளாவை ஒட்டியுள்ள வால்பாறைக்கு யானைகள் இடம்பெயரும். தேயிலைத் தோட்டங்களில் யானைகள் ஒரு மாதம் காலம் முகாமிடுகின்றன. அப்போது அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளை கடந்து செல்லும்போது, ரேஷன் கடை, குடியிருப்பு, அங்கன்வாடி மற்றும் சத்துணவுக் கூடங்களின் சமையலறை ஆகியவற்றை சேதப்படுத்துகின்றன. சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்ததும், யானைகள் கூட்டம் படிப்படியாக வால்பாறை பகுதியில் இருந்து சபரிமலை மற்றும் அதையொட்டியுள்ள கேரளா மலைப் பகுதிகளுக்கு இடம்பெயர்வது வழக்கம். தற்போது வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ள யானைகளை வனத் துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.