

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 3 ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால்சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும், மழைக்காலம் என்பதால் 3 ஆயிரம் இடங்களில் குடிநீரின் தரம் பரிசோதிக்கப்படுகிறது.
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஆகிய 5 ஏரிகளில் இருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அண்மையில் நிவர் மற்றும் புரெவி புயல்களால் ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் நிரம்பி, உபரிநீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் நீர்வரத்துக்கேற்ப தண்ணீர் திறந்துவிடுவது குறைக்கப்பட்டது. பொதுப்பணித் துறைஅதிகாரிகளால் ஏரிகளின் நீர்இருப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கனஅடி. தற்போது 9,963 மில்லியன் கனஅடிநீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் 4,823 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. ஏரிகளில் நீர் நிரம்பினால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் அளவு அதிகரிக்கப்படும் என்று சென்னைக்குடிநீர் வாரியம் தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது தினமும் 830 மில்லியன் லிட்டர் விநியோகிக்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு ஒருநாள் விட்டு ஒருநாள் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. பின்னர் உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி 700 மில்லியன் லிட்டராக இது அதிகரிக்கப்பட்டது. சென்னையின் தினசரி குடிநீர் தேவை 830 மில்லியன் லிட்டராகும்.
தற்போது 3 ஏரிகள் நிரம்பிவிட்டதால் கடந்த வாரத்தில் இருந்துசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் 830 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
வீராணம் ஏரியில் இருந்து..
புயல் காரணமாக கடல்நீரைகுடிநீராக்கும் நிலையங்களில் இருந்து தண்ணீர் எடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக சென்னையின் மற்றொரு குடிநீர்ஆதாரமான வீராணம் ஏரியில் இருந்து தினமும் 180 மில்லியன் லிட்டரும், மீதமுள்ள 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக் குடிநீர் ஏரிகளில் இருந்தும் பெறப்படுகிறது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கும் நாட்களில் 2 ஆயிரம் இடங்களில் குடிநீர் மாதிரி எடுத்து அதன் தரம் பரிசோதிக்கப்பட்டு வந்தது. இப்போது மழைக்காலம் என்பதால் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தினமும் 3 ஆயிரம் இடங்களில் குடிநீர் மாதிரி எடுத்து பரிசோதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.