

கடந்த 5 தினங்களாக பெய்து வரும் கனமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கல்வராயன்மலையிலிருந்து கோமுகி அணைக்கு வரும் நீர்வரத்து வாய்க்காலான தொரடிப்பட்டு வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் புதூர், சின்னதிருப்பதி, மேல்பாச்சேரி, எழுத்தூர், கல் படை, எட்ரபட்டி, தொட்டியம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆற்றைக் கடந்து செல்ல முடியவில்லை. தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவமனை உள்ளிட்ட அவசிய தேவைகளுக்கு பிற பகுதிகளுக்கு செல்ல முடியா மல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
"இயற்கை பேரிடர் காலங்களில் மலைவாழ் மக்களுக்கு நிவாரணஉதவிகள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.தங்கள் பகுதிக்கு நிரந்தர தீர்வும், நிவாரண முகாம் களும் ஏற்படுத்தி தரவேண்டும்" என மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.
1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
'புரெவி' புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கச்சிராயபாளையம், வடக் கனந்தல், கல்வராயன்மலை பகு தியில் காற்றின் வேகம் சற்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கோமுகி அணைக்கான நீர் வரத்து 1,000 கனஅடியாக உள்ளது. இந் நிலையில், அணையின் நீர் மட்டம் 44 அடியையும், மொத்த நீர் பிடிப்பு 489.56 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது.
அணையின் பாதுகாப்புக் கருதி, வரத்து தண்ணீர் 1,000 கனஅடி அப்படியே பாசன வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.