3-வது நாளாக தொடரும் மின்துறை ஊழியர்கள் போராட்டம்; மின் விநியோக தடையால் புதுவை மக்கள் கொந்தளிப்பு

முதல்வர் வீட்டருகே அதிமுக எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் இன்று பங்கேற்ற மறியல் போராட்டம்.
முதல்வர் வீட்டருகே அதிமுக எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் இன்று பங்கேற்ற மறியல் போராட்டம்.
Updated on
1 min read

மூன்றாவது நாளாக புதுச்சேரியில் தொடரும் மின்துறை ஊழியர் போராட்டத்தால் பல இடங்களில் மின்விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

யூனியன் பிரதேசங்களுக்கான மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு புதுவையில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மின்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஒருங்கிணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு என்ற அமைப்பை உருவாக்கி போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், போராட்டக்குழுவோடு அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும், புதுவை சட்டப்பேரவையில் மின்துறை தனியார்மயத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் மின்துறை ஊழியர்கள் போராட்டத்தினை கைவிட்டிருந்தனர்.

இத்தகைய சூழ்நிலையில், சமீபத்தில் மத்திய அரசிடமிருந்து புதுவை அரசுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை தீவிரமாக்கும்படி கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மின்துறை ஊழியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் போராட்டத்தினை தொடர்ந்தனர். எந்த வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே கனமழை காரணமாக புதுவையில் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டது.

மின்துறை ஊழியர்கள் போராட்டத்தின் காரணமாக மின்தடையை சரிசெய்ய முன் வரவில்லை. இதனால் பொதுமக்கள் கொந்தளித்து எம்எல்ஏக்களிடம் முறையிட்டனர். பல்வேறு இடங்களில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

ஆயினும், இன்று (டிச. 06) 3-வது நாளாக மின்துறை ஊழியர்களின் போராட்டம் தொடரந்தது. இன்று காலை உப்பளம் தொகுதி திப்புராயப்பேட்டை வம்பாகீரப்பாளையம் பகுதியில் நேற்று (டிச. 05) இரவு 2 மணியளவில் மின் விநியோகம் தடைப்பட்டது. இதனை சீரமைக்க மின்துறை ஊழியர்கள் யாரும் வரவில்லை. புகார் செய்யும் எண்களும் இயங்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சோனாம்பாளையம் சந்திப்பில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.

இது குறித்து, தகவல் அறிந்த தொகுதி அதிமுக எம்எல்ஏ அன்பழகன் அங்கு வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் முதல்வர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டார்.

புஸ்சி வீதி எல்லையம்மன் சந்திப்பில் ஊர்வலம் வந்தபோது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, முதல்வர் வீட்டருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் வாக்குறுதியால் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ தனக்கு எழுதியுள்ள கடிதத்தில் பேச்சுவார்த்தைக்கு சங்கங்களை அழைக்க வேண்டும். அது தோல்வியடைந்தால் சட்டவிரோத வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது எஸ்மா சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி தலைமைச்செயலாளர் அஸ்வினி குமாருக்கு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை சங்க பிரதிநிதிகளுடன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத்தீர்வு காணவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in