

இந்தியாவில் தோன்றிய அறிவுச் சூரியன், இந்த நூற்றாண்டின் புதிய புத்தர் என, அம்பேத்கரின் நினைவுதினத்தையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரின் 64-வது நினைவு தினம் இன்று (டிச. 06) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், திருவாரூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, தனது முகநூல் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:
"இந்தியாவில் தோன்றிய அறிவுச் சூரியன்! இந்த நூற்றாண்டின் புதிய புத்தர்! ஒடுக்கப்பட்டோர் அனைவருக்குமான ஒளிவிளக்கு! எந்நாளும் எல்லோருக்குமான வழிகாட்டி!
அம்பேத்கரின் நினைவுநாள் இன்று! அவர் காட்டிய சமூகநீதிப் பயணத்தில் தடம்மாறாது நடை போட்ட கருணாநிதியின் திருவாரூர் இல்லத்தில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்!
சமூகநீதிச் சுடரை அணையாமல் காப்போம்!".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.