

பிரதமரின் கரோனா நிவாரணமாக 4,500 ரூபாய் கொடுப்பதாகக் கூறி வங்கி கணக்குகளில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் நடந்துவருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: வங்கியில் இருந்து பேசுகிறேன். சுவிஸ் வங்கிகளில் இருந்துமீட்கப்பட்ட பணத்தை பொதுமக்களுக்கு பிரித்துக் கொடுக்கும் பணிநடந்து வருகிறது. பிரதமர் அறிவித்தபடி ஒவ்வொரு நபருக்கும் ரூ.15 லட்சம் கொடுக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக ரூ.25 ஆயிரம் உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பப்படும். அதற்காக உங்கள் வங்கி கணக்கு விவரங்களை கூறுங்கள் என பேசுகின்றனர்.
மேலும், பிரதமரின் கரோனாநிவாரண நிதியாக அனைவருக்கும் 4,500 ரூபாய் வழங்கப்படுகிறது. அதை உங்கள் வங்கி கணக்கில்செலுத்துகிறோம் எனக் கூறி, டெபிட் கார்டு விவரங்களை பெற்றுபணத்தை கொள்ளையடிக்கின்றனர். இதுகுறித்து ஏற்கெனவே புகார்கள் வந்துள்ளன. தற்போது ஏராளமான பெண்களும் இதுபோல பேசுகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக பேசுவதால் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான நபர்களுக்கு இதேபோன்ற தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. பலர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பணத்தை இழந்தவர்கள் புகாராகவும் பதிவு செய்துள்ளனர். எனவே, இதுபோன்ற போலியான அழைப்புகளை நம்பி யாரும் வங்கி கணக்கு மற்றும் டெபிட் கார்டு விவரங்களை தெரிவிக்க வேண்டாம்.
இவ்வாறு சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.