

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி இரண்டாம்கட்ட போராட்டம் வரும் 14-ம் தேதிதொடங்குகிறது என்று பாமகதலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் முதல்கட்ட போராட்டம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. சென்னை பல்லவன் சாலை அருகே நடந்த முதல்நாள் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி பங்கேற்றார்.
இதையடுத்து, கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் சென்னையில் 3 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முதல்கட்ட போராட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட போராட்டத்துக்கு பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.
இதுகுறித்து பாமக மற்றும் போராட்டக் குழு தலைவர் ஜி.கே.மணி கூறும்போது, ‘‘வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி அடுத்தகட்டமாக வரும் 14-ம் தேதி கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பும், 23-ம் தேதி பேரூராட்சி அலுவலகங்கள் முன்பும் அறப்போராட்டம் நடத்தப்படும். ஜனவரி 8-ம் தேதி நகராட்சி அலுவலகங்கள் முன்பும், 21-ம்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் அறப்போராட்டம் நடக்க உள்ளது. இறுதிப் போராட்டம் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’ என்றார்.