

ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் தொடர்பில்லை என்று ரஜினி கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
ரஜினி கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியன், ரஜினியை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
புதிய கட்சி தொடங்கும் தேதியை வரும் 31-ம் தேதி ரஜினிகாந்த் அறிவிப்பார். அவர்தான் கட்சி தொடங்குகிறார். அவர்தான் தலைமை ஏற்கிறார். அதனால் அதுதொடர்பான அனைத்து செய்திகளையும் அவர்தான் தெரிவிப்பார். கட்சியின் பெயர், சின்னம் உட்பட எல்லாவற்றையும் ஆலோசித்து இருக்கிறோம்.
ஒரு அரசியல் கட்சியை தொடங்குவதற்கான அடிப்படை கட்டுமானம், செயல்திட்டம் என எல்லாவற்றையும் ஆழமாகவும், விரிவாகவும் பேசியுள்ளோம். முதல்வர் வேட்பாளர் பற்றி இதுவரை விவாதிக்கவில்லை. அதுகுறித்து ரஜினி தெரிவித்த கருத்து அப்படியே இருக்கிறது. ரஜினி கட்சி தொடங்கிய அடுத்த கணமே தமிழகத்தில் பெரும்பான்மையான வாக்காளர்கள் அவருக்கு பின்னால் வந்து நிற்கக்கூடிய சூழல் கனிந்துவிடும். தமிழகத்தில் நிச்சயம் மாபெரும் எழுச்சி ஏற்படும்.
ரஜினி கட்சி தொடங்குவதால் எங்களுக்கு பாதிப்பில்லை என்றுதிமுகவும், அதிமுகவும் தாமாகவேதிரும்பத் திரும்ப கூறுவதில் இருந்தே அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது. திமுக, அதிமுகவின் தவறுகளை பேசிப் பேசியே மக்களிடம் சென்று சேர நாங்கள் நினைக்கவில்லை. ரஜினி தொடங்குவது முழுக்க முழுக்க ஆன்மிக அரசியல். எதிர்மறையாக செயல்படுவதற்கோ, எல்லாவற்றுக்கும் எதிர்வினை ஆற்றுவதற்கோ ரஜினி அரசியல் களத்துக்கு வரவில்லை. இன்றுவரை தமிழகத்தில் நடப்பது வெறுப்பு அரசியல்.
ரஜினி தொடங்குவது அன்புசார்ந்த, அனைவரையும் ஆரத்தழுவுகிற ஆன்மிக அரசியல். ஆன்மிகத்துக்கு மதமே கிடையாது. உலகில் உள்ள உயிர்கள் அனைத்திலும் தன்னையும், உயிர்கள் அனைத்தும் தன்னுள் இருப்பதையும் எவன் காண்கிறானோ அவன்தான் ஆன்மிகவாதி. அவனுக்கு சாதி, மதம் கிடையாது, எந்த பேதமும் கிடையாது.
எனவே, இம்மண்ணில் பிறந்தஅனைத்து மக்களையும் அன்பினால் ஆரத்தழுவி அரவணைத்துக் கொள்வதுதான் ஆன்மிகம். அதைத்தான் ரஜினி செய்யப் போகிறார். எனவே, ரஜினி ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்து செயல்படுவார் என்றோ, குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக செயல்படுவார் என்றோ நினைக்க வேண்டாம். சாதி, மதத்தை மீறி ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும்தான் அவரை இந்த உயரத்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. அதனால் அவர்அனைத்து மக்களுக்குமான ஆன்மிக அரசியலைத்தான் கொண்டு வருகிறார். ஆன்மிக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
ஆன்மிக அரசியலில் சொந்த நலனுக்கு இடமில்லை. மக்கள் நலனை மையப்படுத்தி, தன் நலனை முற்றாக மறுதலிப்பதுதான் ஆன்மிக அரசியலாகும். இப்படியொரு புதிய பாதையில் மக்கள் நலனுக்காக புறப்பட்டிருக்கிற ரஜினியை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். மாற்று அரசியலை மக்கள் உருவாக்குவார்கள். ரஜினியை ஆட்சி நாற்காலியை நோக்கி அழைத்துப் போவார்கள். அதுதான் நடக்கப் போகிறது. அதுதான்அதிசயமாகவும், அற்புதமாகவும் இருக்கும். ரஜினி கட்சி தொடங்கும்போது காந்திய மக்கள் இயக்கத்தை அத்துடன் இணைப்போம்.
இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்தார்.
அப்போது ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி உடனிருந்தார்.