புரட்டிப் போட்ட ‘புரெவி’ புயல்: கடலூர், திருவாரூரில் 2.22 லட்சம் ஏக்கர் விளைநிலம் மூழ்கியது; 400 முகாம்களில் 42 ஆயிரம் பேர் தங்கவைப்பு
கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் பெய்த பெரு மழையால் 1 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் மூழ்கியுள்ளன. தாழ்வானஇடங்களில் வசிப்போர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 1.22 லட்சம் ஏக்கரில் நெற் பயிர்களை மழைநீர் சூழந்துள்ளதாக கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர்சதீஸ் தெரிவித்துள்ளார்.
‘புரெவி’ புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் வீராணம் ஏரியின் பிரதான வடிகால்மதகு திறக்கப்பட்டது. காட்டுமன்னார்கோவில் பகுதியில் வீரநத்தம், திருநாரையூர், சர்வராஜன்பேட்டை, கீழவன்னீயூர் உள்ளிட்ட10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. குறிஞ்சிப்பாடி பகுதியில் கல்குணம், ரெட்டியார்பாளையம், ஓணான்குப்பம், கொளக்குடி உள்ளிட்ட 10 கிராமங்களிலும், கடலூரைச் சுற்றியுள்ள நகர் பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
சாலைகள் துண்டிப்பு
சிதம்பரத்தில் ஓமக்குளம், அண்ணாமலை நகர், உசூப்பூர், மின்நகர், தில்லைநாயகபுரம், இந்திரா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
இந்த பெருமழையால் கடலூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கர் விளைநிலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. சிதம்பரம் - கடலூர் சாலை, வடலூர்- கும்பகோணம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி கிராமச் சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது. வருவாய் துறையினர் மற்றும் போலீஸார் தாழ்வான இடங்களில் தவித்தவர்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.
தற்போது 400 முகாம்களில் 42 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அமைச்சர் சம்பத்தலைமையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஆகியோர் கொண்டகுழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் மழைநீர் சூழ்ந்த சம்பா, தாளடி நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்ட பரப்பு மற்றும் நீரொழுங்கிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அரசு இணைச் செயலாளருமான ஷில்பா பிரபாகர் சதீஸ், ஆட்சியர் வே.சாந்தா ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், ஷில்பா பிரபாகர்சதீஸ் செய்தியாளர்களிடம் கூறியது: திருவாரூர் மாவட்டத்தில் 1.22 லட்சம்ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. இவை அனைத்தும் நடவு நட்டு 20 முதல் 60 நாட்களான பயிர்கள்ஆகும். விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
