கரோனா காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது: மத்திய பிரதேச அமைச்சர் விஷ்வாஸ் சாரங் பாராட்டு

கரோனா காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது: மத்திய பிரதேச அமைச்சர் விஷ்வாஸ் சாரங் பாராட்டு
Updated on
1 min read

கரோனா காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று மத்திய பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் விஷ்வாஸ் சாரங் பாராட்டியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் கரோனா கட்டுப்பாட்டு அறைகளை மத்திய பிரதேசத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் விஷ்வாஸ் சாரங் நேற்று பார்வையிட்டார். அப்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய பிரதேச அமைச்சர், தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் சுகாதாரத் துறை நடவடிக்கைகளை பார்வையிட்டு கேட்டறிந்தார். இந்த மழை, புயல், வெள்ள காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உரிய நடவடிக்கை காரணமாக கரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம். புயல், மழை நடவடிக்கையாக 8,456 மருத்துவ முகாம்கள் மற்றும் 435 நடமாடும் மருத்துவ குழுக்கள் நடத்தப்பட்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.

இலவச கரோனா தடுப்பூசி

தமிழகத்தில் உள்ளஅனைத்து நீரேற்ற நிலையங்களிலும், குளோரினேஷன் முழுமையாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் லாரிகளில், குளோரினேஷன் இல்லாமல் தண்ணீர் எடுத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, கடலுார், திருவாரூர், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய பிரதேச அமைச்சர் விஷ்வாஸ் சாரங் கூறும்போது, “கரோனா காலத்திலும், தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு என்னுடைய பாராட்டை தெரிவித்து கொள்கிறேன். சுகாதார பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது.

சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை, மற்ற மாநிலங்களில் உள்ள நல்ல பணிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால்தான், இங்குள்ள உட்கட்டமைப்பு வசதிகளை நேரடியாக வந்து பார்வையிட்டேன். மேலும், மருத்துவ கல்வியில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. மருத்துவ கல்வியில், தமிழகத்துடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம். இதற்காக, தமிழக முதல்வரையும் சந்திக்க உள்ளேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in