மக்கள் நீதி மய்யம் கட்சியில் பெண்களுக்காக ‘மய்யம் மாதர் படை’ தொடக்கம் கமல்ஹாசன் தகவல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

மக்கள் நீதி மய்யம் கட்சியில் பெண்களுக்காக ‘மய்யம் மாதர் படை'என்ற புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெண் சமத்துவத்தை வெறும் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல் மக்கள் நீதி மய்யம் கட்சி அதன் செயல்பாடுகளிலும் அவர்களுக்கு சரியான பங்களிப்பை கொடுத்து அவர்கள் கரங்களை உயர்த்த விரும்புகிறது.

அவ்வகையில் புதியதோர் முன்னெடுப்பாக 'மய்யம் மாதர் படை' என்ற பிரிவு தொடங்கப்படுகிறது.

கட்சியின் கட்டமைப்பு மற்றும்அணிகளில் பொறுப்பு வகிக்கும் பெண்களும், கட்சியின் உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் இதில் பங்குபெறலாம். கட்சி சாராத மக்கள் நலனிலும் தமிழகத்தைச் சீரமைப்பதிலும் ஒரே நோக்கம் கொண்ட பெண்களும் கூட இப்பிரிவில் இணைந்து செயல்படுவார்கள்.

தமிழகம் முழுவதும் பொது நலனிலும், மாற்று அரசியலிலும் ஆர்வம் கொண்ட பெண்களை மக்கள் நீதி மய்யம் கட்சியில் பங்கேற்கச் செய்வதும், வாக்காளர்களைப் பெருமளவில் சந்தித்து கட்சியின் திட்டங்களையும் கொள்கைகளையும் கொண்டு சேர்ப்பதும், தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீதி மய்யம் சார்பாக பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதும் இந்தப் பிரிவுக்கான செயல் திட்டங்களில் முதன்மையானது. இந்தப் பிரிவு மகளிர் அணியின் சென்னை மண்டலதுணைச் செயலாளர் சினேகா மோகன்தாஸ் மேற்பார்வையில் செயல்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதற்கிடையே, கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "முந்நீர் சூழ் உலகு என்பார்கள். மழைநீர், ஆற்றுநீர், சாக்கடை என்று இப்போது தமிழகம் முழுவதும் சூழ்ந்திருக்கும் நீர் பெருமைக்குரியது அல்ல. கரோனா தொற்றுக்காலத்தில் இது பீதிக்குரியது. உள்ளாட்சி நிர்வாகத்தின் உறக்கத்தைக் குறிப்பது. கோடீஸ்வரப் பகுதிகளைப் போல், குப்பத்துப் பகுதிகளும் சுகாதாரமாக இருக்க, அரசு என்ன செய்யப் போகிறது?” என்று கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் பொது நலனிலும், மாற்று அரசியலிலும் ஆர்வம் கொண்ட பெண்களை மக்கள் நீதி மய்யம் கட்சியில் பங்கேற்கச் செய்வது முதன்மையானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in