

கடிதப் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக ஜனவரி மாதம் சிறப்பு கண்காட்சி நடத்தப்படும் என்று தமிழக வட்ட அஞ்சல் துறை தலைவர் சார்லஸ் லோபோ தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களுடனான உறவை மேம்படுத்துவதற்காக அஞ்சல் மன்றம் என்னும் பிரிவை இந்திய அஞ்சல் துறை கடந்த 1990-ம் ஆண்டு உருவாக்கியது. இந்தப்பிரிவின் வெள்ளி விழா நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக அஞ்சல் வட்டத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அஞ்சல் மன்றத்தின் வெள்ளி விழாவை குறிக்கும் பொருட்டு சிறப்பு அஞ்சல் உரையை தமிழக வட்ட அஞ்சல் துறை தலைவர் சார்லஸ் லோபோ வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகள் தொடங் கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே சேர முடியும். ஆனால், 11 வயது வரையிலான பெண் குழந்தைகளும் வரும் டிசம்பர் 12-ம் தேதி வரை இந்த திட்டத்தில் சேரலாம். 1,500 அஞ்சல் நிலையங்கள் தமிழகத்தில் உள்ளன. கடிதப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வண்ணம் சிறப்பு கண்காட்சி ஒன்றை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வரும் ஜனவரி மாதத்தில் நடத்தவுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.