திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் அரசியல் பாடம் படிக்கவில்லை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு
திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் அரசியல் பாடம் படிக்கவில்லை என தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்குற்றம் சாட்டினார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாகை அதிமுக அலுவலகத்தில் நேற்று அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஜெயலலிதாவின் ஆட்சியை முதல்வர் பழனிசாமி சிறப்பாக நடத்தி, மக்களின் வரவேற்பை பெற்றுள்ளார். எனவே, 2021-ல் நடைபெறும் தேர்தலிலும் வென்று ஆட்சியை தொடர்வோம். நடிகர் ரஜினிகாந்த் கட்சியை பதிவு செய்து, கட்சியின் கொள்கை, பெயரை சொன்ன பிறகு அவரை பற்றி பேசுவோம். வெள்ள பாதிப்புகளை சமாளிக்க தமிழக அரசு தவறிவிட்டது என்று குற்றஞ்சாட்டும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் அரசியல் பாடம் படிக்கவில்லை. அதனால் தான் அப்படி பேசுகிறார் என்றார்.
