புதூர் பகுதியில் பலத்த மழை அயன்வடமலாபுரத்தில் 1,000 ஏக்கர் பயிர்கள் மூழ்கின: மானாவாரி விவசாயிகள் கவலை

விடிய விடிய பெய்த மழையால் புதூர் அருகே அயன்வடமலாபுரம் கிராமத்தில்  நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்.
விடிய விடிய பெய்த மழையால் புதூர் அருகே அயன்வடமலாபுரம் கிராமத்தில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்.
Updated on
1 min read

புதூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் அயன்வடமலாபுரத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் மானாவாரி பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

எட்டயபுரம் வட்டம் புதூர் வட்டாரம் அயன்வடமலாபுரம் கிராமத்தில் சுமார் 4,500 ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. நடப்பு ராபி பருவத்தில் உளுந்து, பாசிப்பயறு, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், குதிரைவாலி, மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி போன்றபயிர்களை விவசாயிகள் பயிர் செய்தனர்.

புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதம் இறுதியில் பெய்த மழையால் பயிர்கள் நன்றாக வளர்ந்து வந்தன. இந்நிலையில் ‘புரெவி’ புயல் காரணமாக நேற்று முன்தினம் விளாத்திகுளம், புதூர் பகுதியில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் பெருக்கெடுத்த தண்ணீர் விளை நிலங்களை சூழ்ந்து குளம் போல் காணப்படுகிறது. அயன்வடமலாபுரத்தில் சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் பயிரிட்டிருந்த பாசிப்பயறு, உளுந்து, கொத்தமல்லி, வெங்காயம், வெள்ளைச்சோளம், மக்காச்சோளம், குதிரைவாலி, நெல் உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

காய் பிடிக்கும் பருவத்திலிருந்த உளுந்து, பாசிப்பயறு செடிகள்தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. மக்காச் சோளம், நெற் பயிர்களைமுழுவதுமாக தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, ஆவணி மாதமே மழையை எதிர்பார்த்து பயிரிட்டோம். மழையின்றி பல இடங்களில் பயிர்கள் கருகியதால் 2-வது முறை நிலத்தை உழுது சூரிய காந்தி, கொத்தமல்லி, வெள்ளைச்சோளம், கொண்டை கடலை, வெங்காயம் ஆகியவற்றை பயிரிட்டோம். இதன் பொருட்டு எங்களுக்கு கூடுதல் செலவாகிவிட்டது.

‘புரெவி’ புயலால் நேற்று முன்தினம் இரவு முதல் காலைவரை விடிய விடிய மழை பெய்ததால், மானாவாரி நிலங்களைச் சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது. இது வெளியேற ஒரு மாதத்துக்கு மேல் ஆகும். மழை தொடர்ந்தால் பயிர்கள் மேலும் பாதிக்கப்படும். எனவே, புயல் பேரிடர் வெள்ள நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து உரிய உதவி வழங்க வேண்டும்’’ என்றார்.

நிரந்தர தீர்வு

வவ்வால்தொத்தியில் இருந்து அயன்வடமலாபுரம் வரை 5 கி.மீ. தூரத்துக்கு மண் சாலை இருந்தது. அதிக மழை பெய்தால் வடக்கு பகுதியில் இருந்து மழைநீர் எளிதாக தெற்கு பகுதி வழியாக வைப்பாறு ஆற்றுக்கு சென்றுவிடும். ஆனால், மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றிய போது சாலை உயர்த்தப்பட்டதால் தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்தச் சாலையில் 5 இடங்களில் சிறு பாலம் அமைத்துக் கொடுத்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் மழைநீர் தேங்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in