

வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்க்க வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மாநில அளவிலான வினாடி-வினா போட்டியை நடத்தி 3 குழுக்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தேர்வு செய்துள்ளார்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“18 வயதை நிறைவு செய்த தகுதிவாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும் மற்றும் பட்டியலில் பெயர் நீக்கம், திருத்தம் செய்வதற்கும், மேலும் வாக்காளர் விபரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை சரிசெய்யும் பொருட்டும் இந்தியத் தேர்தல் ஆணையம், சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்‐2021-ஐ நாடு முழுவதும் நடத்தி வருகிறது.
தகுதிவாய்ந்த வாக்காளர்கள் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் எண்ணிக்கை சதவிகிதத்தை உயர்த்தும் நோக்கத்திலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும் மாநில அளவிலான இயங்கலை வினாவிடைப் போட்டி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியால் நடத்தப்பட்டது.
இந்த வினாவிடைப் போட்டியானது முதற்கட்ட சுற்று மூன்று நிலைகளில் அக்டோபர் மாதம் 25 மற்றும் 26, 2020 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தத்தில் 13602 பார்வையாளர்கள் இந்தச் சுற்றில் பங்கேற்றனர். இப் போட்டியின் முதல் சுற்றில் 36 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெற்று, அதற்குரிய போட்டி ஐந்து நாட்களாக (அக்டோபர் 31, நவம்பர் 1,7,8 மற்றும் 15 ) நடைபெற்றது.
இரண்டாம் சுற்றுப் போட்டியானது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பாகவே நடத்தப்பட்டு, அனைத்து சுற்றுகளும், யுடியூப்-பில் ஒளிபரப்பப்பட்டது. தந்தை-மகன், கணவன்-மனைவி, தாய்-மகள், உடன்பிறந்தோர், நண்பர்கள், உறவினர்கள் என்ற அடிப்படையில் குழுக்கள் அமைந்திருந்தது.
இறுதிச் சுற்றுக்கு நான்கு குழுக்கள் தேர்வு பெற்று, பொதுத் (தேர்தல்) துறையின் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலக காணொலி அரங்கில் 05.12.2020 அன்று நடைபெற்றது. இறுதிச்சுற்று தலைமைத் தேர்தல் அதிகாரியின் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற போட்டியாளர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி கலந்துரையாடினார்.
இந்தப் போட்டியும் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பாகவே இறுதிச் சுற்றுப்போட்டியாளர்களுடன் நடத்தப்பட்டது. கீழ்க்கண்ட குழுக்கள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
முதற் பரிசு - அன்டன் ஸ்டீவன், கிறிஸ்டி தெரேஸ்
இரண்டாம் பரிசு - அனிருத், அருண் பாலாஜி
மூன்றாம் பரிசு - முகமது ரிவின், ரிஸ்வின்
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் மாநில அளவில் 25.01.2021 அன்று நடத்தப்படும் தேசிய வாக்காளர் தின விழாவில் வழங்கப்படும்”.
இவ்வாறு தலைமைத் தேர்தல் அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.