

நாகர்கோவில் அருகே ஆற்றூரில் காங்கிரஸார் ஏர், கலப்பைப் பேரணி நடத்தியதை அடுத்து எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் வேளாண் மசோதா, மற்றும் விவசாயிகளைப் பாதிக்கும் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் இன்று (டிச.5) மாலை கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலை முன்பு ஏர், கலப்பைப் பேரணி நடைபெற்றது.
பேரணிக்குக் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். திருவட்டாறு பேருந்து நிலையம் நோக்கிச் செல்வதற்குத் திட்டமிட்டு காங்கிரஸார் பேரணியாகச் சென்றனர். அப்போது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் சாலையில் அமர்ந்து காங்கிரஸார் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் உட்பட 200-க்கும் மேற்பட்டோரைப் போலீஸார் கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஆற்றூரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.