கோவில்பட்டியில் விடிய விடிய பெய்த மழை: ஆயிரம் ஏக்கர் மானாவாரி பயிர்கள் நீரில் மூழ்கின- விவசாயிகள் கவலை

விடிய விடிய பெய்த மழை காரணமாக புதூர் அருகே அயன்வடமலாபுரம் கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
விடிய விடிய பெய்த மழை காரணமாக புதூர் அருகே அயன்வடமலாபுரம் கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
Updated on
2 min read

கோவில்பட்டி புதூர் பகுதியில் விடிய விடிய பெய்த மழை காரணமாக அயன்வடமலாபுரத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்கள் பயிர்கள் நீரில் மூழ்கின.

எட்டயபுரம் வட்டம் புதூர் வட்டாரம் அயன்வடமலாபுரம் கிராமத்தில் சுமார் 4,500 ஏக்கர் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு இந்தாண்டு ராபி பருவத்தில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், குதிரைவாலி, மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி போன்ற பல்வேறு பயிர்களை விவசாயிகள் பயிர் செய்தனர்.

புரட்டாசி மாத மழைக்கு பயிர்கள் ஓரளவு வளர்ந்து காணப்பட்டது. ஐப்பசி 25-ம் தேதிக்கு பின்னர் பெய்த மழையால் பயிர்கள் நன்றாக வளர்ந்து வந்தன. தற்போது ‘புரெவி’ புயல் காரணமாக நேற்று முன்தினம் விளாத்திகுளம், புதூர் பகுதியில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மானாவாரி விளை நிலங்களை சூழ்ந்து குளம் போல் காணப்படுகிறது.

இதில், அயன்வடமலாபுரத்தில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட பாசி, உளுந்து, கொத்தமல்லி, வெங்காயம், வெள்ளைச்சோளம், மக்காச்சோளம், குதிரைவாலி, நெல் போன்ற பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

காய் பிடிக்கும் நிலையில் உள்ள உளுந்து, பாசி செடிகள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. மக்காச் சோளம், நெற் பயிர்களை முழுவதுமாக தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அவை அழுகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, ஆவணி மாததே மழையை எதிர்பார்த்து பயிரிட்டோம். ஆனால், அதன் பின்னர் மழையில்லாததால், இருசீராக பயிர்கள் வளர்ந்தன.

பல இடங்களில் பயிர்கள் கருகியதால் 2-வது மீண்டும் நிலத்தை உழுது பயிர் செய்தோம். இதில், சூரிய காந்தி, கொத்தமல்லி, வெள்ளைச்சோளம், கொண்டை கடலை, வெங்காயம் ஆகிய பயிர்களை 2-ம் முறையாக பயிரிட்டோம். இதில், எங்களுக்கு ஏற்கெனவே ரூ.20 ஆயிரம் வரை செலவாகிவிட்டது.

தற்போது ‘புரெவி’ புயல் எங்களை மேலும் புரட்டி போட்டுவிட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை விடிய விடிய மழை பெய்ததால், மானாவாரி நிலங்களை சுற்றி வெள்ள நீர் தேங்கி உள்ளது. தற்போது தேங்கி உள்ள தண்ணீர் வெளியேற ஒரு மாதத்துக்கு மேல் ஆகும். இதில், 2 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை தொடர்ந்தால் பயிர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, புயல் பேரிடர் வெள்ள நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து உரிய உதவியை வழங்க வேண்டும், என்றார் அவர்.

நிரந்தர தீர்வு

வெவ்வால்தொத்தியில் இருந்து அயன்வடமலாபுரம் வரை உள்ள 5 கி.மீ. தூரத்துக்கு மண் சாலை இருந்தது. அதிக மழை பெய்தால் வடக்கு பகுதியில் இருந்து மழைநீர் எளிதாக தெற்கு பகுதி வழியாக வைப்பாறு ஆற்றுக்கு சென்றுவிடும். ஆனால், மண் சாலை தார்ச்சாலையாக மாற்றும்போது, சாலை உயர்த்தப்பட்டது. இதனால் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த சாலையில் 5 இடங்களில் பாலம் அமைத்துக்கொடுத்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் மழைநீர் தேங்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in