சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் மது போதையில் பெண்ணிடம் தகராறு செய்த போலீஸ்காரர் கைது

சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் மது போதையில் பெண்ணிடம் தகராறு செய்த போலீஸ்காரர் கைது
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நரிக்குறவரினத்தைச் சேர்ந்தவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சீருடை அணியாமல், லத்தியுடன் வந்த ஒருவர், நரிக்குறவரின பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதை தட்டிக்கேட்ட அவரது கணவரையும் தாக்க முயன்றுள்ளார்.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு கூட்டம் கூடியது. தகாத செயலில் ஈடுபட முயன்ற நபர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. அவரை பொதுமக்கள் பிடித்து, அங்கிருந்த புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர், மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் சங்கரன்கோவில் அருகே உள்ள சில்லிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது.

அவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் பேருந்தில் ஏற்றி, ஊருக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அறிந்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.

இந்த குற்றச்சாட்டில் தொடர்புடைய போலீஸ்காரர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து எஸ்பி, தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் புகாரை பெற்ற சங்கரன்கோவில் டவுன் போலீஸார், அதன்பேரில் வழ்க்கு பதிவு செய்து, போலீஸ்காரர் ராமச்சந்திரனை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in