டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடி, திருச்செந்தூரில் திமுக ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். படம்: என்.ராஜேஷ்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடி, திருச்செந்தூரில் திமுகவினர் இன்று கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லி நகரின் எல்லைகளில் குவிந்துள்ள விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராகக் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசைக் கண்டித்தும் திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் 5-ம் தேதி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே இன்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், முன்னாள் மேயர் இரா.கஸ்தூரி தங்கம், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், வழக்கறிஞர் அணி செயலாளர் மோகன்தாஸ் சாமுவேல் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவமாகவும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

தெற்கு மாவட்டம்:

இதேபோல் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்செந்தூரில் நடைபெற்ற கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாநில மீனவணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பூபதி, பிரம்மசக்தி, அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட அவை தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in