

மீன்பிடி தடைக்காலம் மீன்கள் பெருக்கம் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை, இதனால் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர், கடும் புயல், மழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரை மீன்பிடி தடைக்காலத்தை மாற்றியமைக்கவேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை - திருவள்ளூர் - காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடிப்பு கில்நெட் மற்றும் லாங்லைன் டூனா விசைப்படகு உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஆர்.வரதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், “உலகில் அதிக புயல் பாதிப்புக்குள்ளாகும் 6 முக்கிய இடங்களில் வங்காள விரிகுடா இருக்கிறது, அதை ஒட்டிய இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில், 2008-ம் ஆண்டு நிஷா புயல் முதல் 2019-ம் ஆண்டு புல்புல் புயல் வரை ஒவ்வொரு ஆண்டும் வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் வீசியுள்ளது. கடலின் தொடர் சீற்றம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம்.
2001-ம் ஆண்டு முதல் ஏப்ரல் 15 முதல் மே 31 வரை 45 நாட்கள் என மீன் பிடித் தடைக்காலம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், பின்னர் 2018-ம் ஆண்டு முதல் ஜூன் 15 வரை என 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டது.
இயற்கையின் கோரப்பிடியில் மூன்று மாதம் கடலுக்குள் செல்ல முடியாத நிலையில், மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரையிலான 61 நாட்களும் கடலுக்கு செல்ல முடியவில்லை.
மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே மத்திய மாநில அரசுகள் மீன்பிடி தடைகாலத்தை நிர்ணயித்துள்ள அந்த 61 நாட்களில் மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதற்கான விஞ்ஞானப்பூர்வமான காரணங்கள் ஏதுமில்லை என மத்திய அரசிடம் வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதனடிப்படையில் ஏப்ரல் 15 முதல் ஜுன் 15 வரை என்ற மீன்பிடி தடைக்காலம் தொடர்பான உத்தரவை ரத்து செய்துவிட்டு, வங்கக்கடல் சீற்றம் மிகுந்து காணப்படும் அக்டோபர் 15 முதல் டிசம்பர் 15 வரையிலான 62 நாட்களை மீன்பிடித் தடைகாலமாக அறிவிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்”. என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகளின் மீன்வளத்துறை, இந்திய மீன்வள ஆய்வுத்துறை, மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம், தமிழ்நாடு மீனவர் நல வாரியம், மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகியவை 6 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.