

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (டிச. 05) செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
"மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 12 மணிநேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கக்கூடும். இதன் காரணமாக, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழையும், அவ்வப்போது ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவாக, கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் 19 செ.மீ., நாகப்பட்டினம், காரைக்காலில் தலா 16 செ.மீ., திருவாரூர் மாவட்டம் குடவாசல் 15 செ.மீ., சென்னை டிஜிபி அலுவலகம், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் தலா 12 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீச வாய்ப்பிருப்பதால், மீனவர்கள் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு அடுத்த 24 மணிநேரத்திற்கும், கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.