

கரோனாவின் தாக்கம் பல்வேறு தொழில்களை முற்றாக முடக்கியது. இதில் பதிப்புலகமும் தப்பவில்லை. இந்நிலையில் கரோனாவுக்குப் பின் இப்போது புத்தகத் திருவிழாக்கள் மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளன. நாகர்கோவிலில் மக்கள் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் நடந்துவரும் புத்தகக் கண்காட்சி ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனாவுக்குப் பின் பதிப்புலகம் எப்படி இருக்கிறது? என மக்கள் வாசிப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வீரபாலன் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், ''கரோனாவால் பதிப்புலகம் தொடக்கத்தில் முற்றாக முடங்கிப்போய் இருந்தது. இப்போது அதில் இருந்து மெல்ல மீண்டெழுந்து வருகிறோம். கரோனாவுக்குப் பின்பு அரசு புத்தகக் கண்காட்சிகளுக்கு அனுமதி கொடுத்தது. முதலில் காரைக்குடியில் கண்காட்சி போட்டோம். தொடர்ந்து தூத்துக்குடி, அதன்பின்பு நாகர்கோவில் வந்துள்ளோம். காரைக்குடியிலும், தூத்துக்குடியிலும் எதிர்பார்த்ததைவிட நன்றாகவே புத்தகங்கள் விற்பனையாகின.
கரோனா காலம் மக்களுக்கு வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறது. காரைக்குடியில் சமையல் கலை சார்ந்த புத்தகங்கள் அதிகம் போனது. தூத்துக்குடியில் அரசியல் புத்தகங்களும் போனது. நாகர்கோவிலில் ஆன்மிகப் புத்தகங்களும் அதிகளவில் போகின்றன. கரோனாவுக்குப் பின்பு மூன்று ஊர்களில் கண்காட்சி நடத்தியதில் ஒன்றைப் பார்க்க முடிந்தது. நம் பாரம்பரிய மரபு மருத்துவம் சார்ந்த புத்தகங்களுக்குத் திடீர் கவனம் ஏற்பட்டுள்ளது.
கரோனாவை இயற்கை மருந்துகளால் விரட்டிய பலருக்கும் நம் பாரம்பரியத்தின் மகத்துவத்தை புரிந்திருப்பதை இது காட்டுகிறது. கரோனாவால் வீட்டில் இருந்தே பணி செய்யும் முறையால், இளம் தலைமுறையினர் பலரும் இப்போது வாசிக்கத் தொடங்கியுள்ளனர். நாகர்கோவிலில் ஆரம்பத்தில் ஒரு வாரத்துக்கு மட்டுமே புத்தகக் கண்காட்சி நடத்தத் திட்டமிட்டு வந்தோம்.
ஆனால் வாசகர்கள் அதிக அளவில் வருவதைப் பார்த்ததும் ஜனவரி 3-ம் தேதி வரை புத்தகக் கண்காட்சியை நீட்டித்திருக்கிறோம். கரோனாவால் சரிந்து கிடந்தது பதிப்புலகம்.அதே கரோனா வீட்டுக்குள்ளேயே இருக்க வைத்து மக்களுக்குக் கொடுத்த இறுக்கத்தால் வாசிப்பை நோக்கி நகர்த்தியிருக்கிறது. அதனால் பதிப்புலகம் மெல்ல மீண்டெழுந்து வருகிறது'' என்றார்.