

2021 தமிழக தேர்தலுக்குக் காத்திருங்கள், எங்களைத் தடுக்க முடியாது என்று பாஜகவைச் சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் கடந்த டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை தீவிரமாகப் பிரச்சாரம் செய்தன.
பாஜக சார்பில் அக்கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். இந்தத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் டிஆர்எஸ் 55 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. இருப்பினும் பெரும்பான்மைக்குத் தேவையான 75 இடங்களைப் பெற முடியாத சூழலில் அக்கட்சி உள்ளது. இரண்டாவது இடத்தில் பாஜக 48 இடங்களிலும், ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 44 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகளால் பாஜக கட்சியினர் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். அக்கட்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. 2016-ம் ஆண்டு 4 சீட்டிலிருந்து 2020-ம் ஆண்டில் 48 சீட்கள். பாஜகவின் இந்த அபார வளர்ச்சி பிரதமர் நரேந்திர மோடியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. 2021 தமிழக தேர்தலுக்குக் காத்திருங்கள். எதுவும் எங்களைத் தடுக்க முடியாது."
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.