

கோவை பீளமேடு விமான நிலையத்தில், பயணியிடம் ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருளை பறிமுதல் செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை பீளமேடு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். திருச்சி மாவட்டம் துவாக்குடியைச் சேர்ந்தவர் நாகரத்தினம் (40). இவர் இன்று (டிச. 5) காலை ஷார்ஜா செல்வதற்காக கோவை பீளமேடு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். அவருடன் அவரது நண்பர்கள் அலிபாய், அருண் ஆகியோர் வந்தனர்.
கோவை விமான நிலைய வளாகத்துக்குள் வந்த நாகரத்தினம் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சென்றார். "விமான நிலையத்துக்குள் செல்லும் போது, உடன் வந்த தன் நண்பர்கள் காலிப் பெட்டியை என்னிடம் கொடுத்து உள்ளே எடுத்துச் செல்லுமாறும், பின்னர் தாங்கள் உள்ளே வந்து வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் உள்ளே வரவில்லை. இந்த பெட்டி மீது சந்தேகமாக உள்ளது" எனத் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் அந்தப் பெட்டியை வாங்கி சோதனை செய்தனர். அந்த பெட்டியின் அடிப்பகுதியில் ஒரு கவரில், ஒரு கிலோ 200 கிராம் எடை கொண்ட மெத்தாபிட்டமைன் போதைப் பொருள் இருப்பது தெரிந்தது. சர்வதே சந்தையில் இதன் மதிப்பு ரூ.6 கோடி ஆகும். போதைப் பொருள் வர்த்தகர்களிடம் இதற்கு அதிக வரவேற்பு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் இது தொடர்பாக பீளமேடு போலீஸில் புகார் அளித்தனர். பீளமேடு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். நாகரத்தினம் கூறுவது உண்மையா?, அவரிடம் பெட்டியை அளித்துச் சென்றவர்கள் எங்கு உள்ளனர் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.