

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாகப் புரெவி புயல் காரணமாக தொடர் மழை பெய்துவருகிறது.
முன்னெச்சரிக்கையாக கொடைக்கானலுக்கு வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று கொடைக்கானல்- பழநி மலைச்சாலையில் கோம்பைக்காடு, புல்லூர் எஸ்டேட் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது.
சாலையில் மண் குவியல்களை உடனுக்குடன் நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தி சாலையை சீராக்கினர். தடுப்பு சுவர் சரிந்த இடங்களில் மணல் மூடைகளை அடுக்கினர்.
சாலைகள் சீரமைப்பிற்கு பிறகு நேற்று மாலை முதல் கொடைக்கானல் செல்ல வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்துவருகிறது. தொடர்மழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆங்காங்கே புதிய அருவிகள் தோன்றி தண்ணீர் கொட்டுகிறது. இதனால் மண்ணில் ஈரப்பதம் அதிகரிப்பதால் பாறைகள் சரிந்துவிழும் அபாய நிலை உள்ளது.
இன்று அதிகாலை பெருமாள்மலையில் இருந்து பழநி செல்லும் மலைச்சாலையில் ஏலக்காய் பிரிவு அருகே
மண்சரிவு ஏற்பட்டதில் சாலை துண்டிக்கப்பட்டது.
இதனால் பழநி சாலையில் போக்குவரத்து தடைபட்டது. மண் சரிவை அகற்றுபணியை ஜேசியபி இயந்திரம் உதவியுடன் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
மழைக்காலம் முடியும் வரை பழநி மலைச்சாலையில் வாகனங்கள் செல்வது ஆபத்தானதாகவே உள்ளதாக தெரிகிறது. இந்த சாலையில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுகிறது.
வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும்போது வாகனத்தின் மீது மண் சரிவு ஏற்பட்டால் பெரும்விபத்துக்கு வாய்ப்புள்ளது. எனவே மழைகாலம் முடியும் வரை பழநி செல்லும் மலைச்சாலையை தீவிர கண்காணிப்புக்குள்ளாக்க வேண்டும் அல்லது இந்தச் சாலையில் போக்குவரத்தை முற்றிலும் துண்டிக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.