

7 சாதிகளை இணைத்து தேவேந்திர குலவேளாளர் என ஒரே பெயரில் அழைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய உள்ளோம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சிவகங்கையில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வுசெய்த அவர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:
ரஜினி கட்சியே பதிவு செய்யவில்லை. அறிவிப்பு மட்டுமே வெளியிட்டுள்ளார். முதலில் அவர் கட்சி தொடங்கட்டும் பார்க்கலாம். அதன்பிறகு கருத்துக் கூறுகிறேன். யூகத்துக்கு எல்லாம் கருத்துச் சொல்ல முடியாது. ரஜினி குறித்து துணை முதல்வர் கூறியது அவரது சொந்தக் கருத்து. கருத்துக் கூற யாருக்கும் உரிமையுள்ளது.
தென்மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி - வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் ஜனவரியில் தொடங்கி வைக்கப்படும். வ.உ.சி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பரமசிவ சுப்புராயன் ஆகிய 3 பேருக்கும் சட்டபேரவையில் முழு உருவ படம் வைக்கப்படும்.
பள்ளர், குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட 7 சாதிகளை இணைத்து தேவேந்திர குலவேளாளர் என ஒரே பெயரில் அழைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன் அடிப்படையில் 2019 மார்ச் 4-ல் குழு அமைக்கப்பட்டது. அக்குழு பரிந் துரை அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய உள்ளோம். எனினும்
அவர்கள் பயன்பெற்று வந்த சலுகைகள் தொடரும்.
2 ஜி வழக்கில் ஆ.ராசா காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கும்போதே சிறையில் அடைக்கப்பட் டார். இதில் இருந்தே அவரது ஊழல் வெட்ட வெளிச்சமாகத் தெரியும். இந்த வழக்கை சி.பி.ஐமேல் முறையீடு செய்துள்ளது.
ஸ்டாலின் டெண்டர் ஊழல்என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் டெண்டரில் தங்களுக்கு வேண்டியவர்களுக்குக் கொடுப்பதற் காக முதலில் வருபவர்களுக்கு டெண்டர் என, எந்த டெண்டரிலும் இல்லாத விதியைப் பின்பற்றி ஊழல் செய்வதற்காகவே டெண்டர் கொடுத்துள்ளனர்.
இதன் மூலம் ஒரு லட்சம்கோடி ரூபாய்க்கு மேல் ஊழல்நடந்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைனில் டெண்டரில் யார் வேண்
டுமானாலும் பணம் கட்டி எடுக்கும்வகையில் வெளிப்படையாக நடக்கிறது. இது தெரிந்தும் ஸ்டாலின் தேவையில்லாத புகார்களை
தெரிவிக்கிறார் என்றார். 2026-ம் ஆண்டு ஆட்சிக்கு வருவோம் என கூறும் பா.ஜ.க உடன் கூட்டணி வைத்துள்ளீர்களே என்ற கேள்விக்கு, “சமீபத்தில் அமித்ஷா பங்கேற்ற கூட்டத்திலேயே 2021-ல் அதிமுக ஆட்சி அமையும் என்று பதிவு செய்துள்ளேன். 2026-ல் யார், யார் இருப்போம் என்றே தெரியாது. அது குறித்து அப்போது பார்ப்போம்” என்று கூறினார்.
மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக பணி
கரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்ய முதல்வர் பழனிசாமி மதுரையிலிருந்து சிவகங்கைக்கு கார் மூலம் புறப்பட்டார்.
சிவகங்கையில் மதுரை முக்கு என்ற இடத்துக்கு முதல்வரின் வாகனம் சென்றபோது காரைக்குடியைச் சேர்ந்த அமானுல்லா மகன் அ.மஸ்தான் பாதுஷா கையில் மனுவுடன் சாலையோரம் காத்திருந்தார்.
ஒரு மாற்றுத்திறனாளி மனுவுடன் காத்திருப்பதை அறிந்த முதல்வர் பழனிசாமி, தனது காரை நிறுத்தி அவரிடம் மனுவைப் பெற்றுக் கொண்டு, “உங்களுக்கு என்ன தேவை” எனக் கேட்டார். அப்போது, “இரு கால்களும் பாதித்து மாற்றுத்திறனாளியாக உள்ள நான், பி.பி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ வரை படித்துள்ளேன். எனக்கு ஏதாவது ஒரு அரசுத் துறையில் பணி வழங்குமாறு கோரிக்கை வைத்தார். கோரிக்கையைக் கேட்ட முதல்வர் உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளிக்கு ஏதாவது ஒரு பணி உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி, மாற்றுத்திறனாளி அ.மஸ்தான் பாதுஷாவை காரைக்குடி அரசு மருத்துவமனை ரத்த வங்கிப் பிரிவில் விவர உள்ளீட்டாளர் பணிக்கு நியமனம் செய்ய முதல்வர் உத்தரவிட்டார். சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்துக்கு அவரை வரவழைத்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பணி நியமன ஆணையை வழங்கினார். மனு அளித்த சில மணி நேரத்திலேயே மாதம் ரூ.15,000 ஊதியம் பெற வழிவகை செய்த முதல்வருக்கு மாற்றுத்திறனாளி அ.மஸ்தான் பாதுஷா நன்றி தெரிவித்தார்.