குட்கா விவகாரத்தில் உரிமைக் குழு நோட்டீஸை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

குட்கா விவகாரத்தில் உரிமைக் குழு நோட்டீஸை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
Updated on
1 min read

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு சென்றதாக, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை உரிமைக் குழு நோட்டீஸ் பிறப்பித்தது. இதை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, பேரவை உரிமைக் குழு 2-வது முறையாக நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த நோட்டீஸையும் எதிர்த்து திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றநீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த தடையை நீக்கக் கோரி சட்டப்பேரவைச் செயலர், உரிமைக் குழு சார்பில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பு இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ, அமித் ஆனந்த் திவாரி, சட்டப்பேரவைச் செயலர் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உரிமைக் குழு சார்பில் அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது, தடை செய்யப்பட்ட குட்காவை பேரவைக்குள் காட்சிப்படுத்தியதற்காக ஏற்கெனவே முதல் நோட்டீஸும், பேரவைத் தலைவரின் முன்அனுமதி இல்லாமல் தடை செய்யப்பட்ட பொருட்களை பேரவைக்குள் கொண்டு வந்ததற்காக 2-வது நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டதாக உரிமைக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, ‘‘எந்தெந்த பொருட்களை பேரவைக்குள் கொண்டுவர முன்அனுமதி பெறவேண்டும் என விதிமுறை உள்ளதா’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘‘எது உரிமை, எது உரிமை மீறல் என்பது இன்னும் வரையறை செய்யப்படவில்லை. பாரம்பரிய நடைமுறைகள் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படுகிறது. நீதிமன்றத்தில் விசாரணை நடந்துகொண்டு இருக்கும்போது, ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் புகை பிடிக்கக்கூடாது என எந்த விதியும் இல்லை. ஆனாலும், அது நீதிமன்றத்தில் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கம்.

அதுபோலத்தான் பேரவையும். பேரவையின் மாண்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் எந்த உறுப்பினரும் ஈடுபட முடியாது.
தவிர, இந்த விவகாரத்தில் பேரவை இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. அவ்வாறு இறுதி முடிவு எடுத்த பிறகு, அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்’’ என்று வாதிட்டார். இதற்கு திமுக தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

வாதங்களைக் கேட்ட நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in