

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-வது நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டநிர்வாகிகள் இன்று மலர்அஞ்சலி செலுத்துகின்றனர்.
அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழகத்தில் 6 முறை முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிச. 5-ம் தேதி மறைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு தற்போது பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஜெயலலிதாவின் 4-ம்ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, காலை 10.45 மணிக்கு அவரது நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பதால், இதில்அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் குறிப்பிட்ட அளவே பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்திலும், மற்ற மாநிலங்களிலும் அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் படத்தை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.