புல்லாங்குழல் கலைஞர் ரமணி காலமானார்: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

புல்லாங்குழல் கலைஞர் ரமணி காலமானார்: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்
Updated on
1 min read

பழம்பெரும் புல்லாங்குழல் கலைஞர் என்.ரமணி சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 81.

ரமணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

புல்லாங்குழல் இசைக் கருவிக்கு தனித்துவத்தையும், தனிச் சிறப்பையும் ஏற்படுத்திக் கொடுத்த ‘புல்லாங்குழல்’ என்.ரமணி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். புல்லாங் குழல் இசை மேதையாக விளங்கிய என்.ரமணி 5 வயதிலேயே தனது இசை பயணத்தைத் தொடங்கியவர். 22-வது வயதிலேயே மியூசிக் அகாடமியில் புல்லாங்குழல் இசைக் கச்சேரி நடத்தியவர். பக்கவாத்தியமாக இருந்த புல்லாங்குழல் இசையை தனி இசையாக நடத்தியவர்.

சங்கீத கலாநிதி, சங்கீத கலை சிகாமணி, பத்ம, பத்மபூஷண் என்று எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ள ரமணி, புல்லாங்குழல் இசையில் தனக்கென தனி இடத்தைப் பெற்று பெரும் புகழை தனதாக்கிக் கொண்டவர். அவரது மறைவு தமிழ் இசை உலகுக்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கர்னாடக இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

1934-ம் ஆண்டு திருவாரூரில் பிறந்த ரமணி தனது ஆரம்பகால கர்னாடக இசைப் பாடங்களை அவரது தாய்வழி தாத்தா ஆழியூர் நாராயணசாமி ஐயரிடம் பயின்றார். ரமணி சமீபகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மனைவி, 2 மகன்கள், பேரக் குழந்தைகள் உள்ளனர். பேரன் அதுல் குமாரும் புல்லாங்குழல் இசைக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in