

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 நீதிபதிகளில் 3 பேருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. 53 நீதிபதிகள் பணிபுரிந்த நிலையில் மாவட்ட நீதிபதிகளாக இருந்த சந்திரசேகரன், நக்கீரன், வி.சிவஞானம், இளங்கோவன், ஆனந்தி, கண்ணம்மாள், எஸ்.சதிக்குமார், முரளி சங்கர், மஞ்சுளா, தமிழ்ச்செல்வி ஆகியோர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்களில் நீதிபதிகள் முரளிசங்கர்-தமிழ் செல்வி ஆகியோர் கணவன் - மனைவி ஆவார்கள்.
புதிய நீதிபதிகள் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் 7 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, கே.முரளிசங்கர் ஆகியோருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் இன்று (டிச. 5 ) முதல் முறையே 2014ம் ஆண்டு வரையிலான உரிமையியல் மேல்முறையீடு வழக்குகள், 2015 முதல் 2018 வரையிலான உரிமையில் சீராய்வு வழக்குகள், 2015 முதல் 2018 வரையிலான உரிமையியல் மேல்முறையீடு வழக்குகளை விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நீதிபதிகள் நியமனத்தால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 12 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது.