Published : 04 Dec 2020 08:45 PM
Last Updated : 04 Dec 2020 08:45 PM

ரஜினி கட்சி அறிவிப்பு: ஓபிஎஸ்-இபிஎஸ் கருத்துகளில் வேறுபாடு

ரஜினி கட்சி தொடங்குவது குறித்து அறிவித்த விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இடையே மூன்று விதவிதமான கருத்துகள் வந்துள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தார். ஆனால், கட்சி தொடங்காமல் 3 ஆண்டுகளைக் கடத்திய அவர் திடீரென நேற்று காலையில் ஜனவரியில் கட்சி தொடக்கம், டிச.31-ம் தேதி அறிவிப்பு என ட்விட்டரில் அறிவித்துப் பின்னர் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தமிழகத்தின் தலை எழுத்தை மாற்ற வேண்டும், அனைத்தையும் மாற்ற வேண்டும், இப்போது இல்லைன்னா எப்போதும் இல்லை என்று பேசித் தனது மக்கள் மன்றத்துக்குத் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி என்கிற முன்னாள் பாஜக நிர்வாகியை நியமித்து அறிமுகப்படுத்தினார். பின்னர் தமிழருவி மணியனை மேற்பார்வையாளராக நியமித்தார்.

ரஜினி கட்சி தொடங்குவது குறித்து கனிமொழி தவிர திமுகவில் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. பாஜகவின் கூட்டணியில் இருக்கிறோம் என அமித் ஷா கலந்துகொண்ட விழாவில் அதிமுகவின் இரு தலைவர்களும் மேடையில் அறிவித்தனர். ஆனால், பாஜக தரப்பில் யாரும் பேசவில்லை.

ரஜினி கட்சி ஆரம்பிப்பதால் அவர் பாஜக கூட்டணியில் இருப்பாரா?, பாஜக கூட்டணியில் அதிமுக இருக்குமா? அல்லது பாஜக, ரஜினி, அதிமுக ஒன்றாகத் தேர்தலைச் சந்திப்பார்களா என்றெல்லாம் சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.

இதனிடையே ரஜினி கட்சி தொடங்கும் அறிவிப்பு குறித்து நேற்று தேனியில் ஓபிஎஸ்ஸிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் கட்சி ஆரம்பித்ததை வரவேற்பதாகவும், எதிர்காலத்தில் எதுவும் நடக்கும் என்றும், ரஜினியுடன் அதிமுக கூட்டணி அமைக்கலாம் என்றும் தெரிவித்தார்.

ஆனால், சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர், “ஓபிஎஸ்ஸின் கருத்து அவரது சொந்தக் கருத்து. ரஜினி கட்சி தொடங்குவது குறித்து யாரும் கருத்தைச் சொல்லலாம். எம்ஜிஆர் மிகப்பெரிய தலைவர். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. அவரோடு ஒப்பிட்டுக் கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.

சிவகங்கையில் முதல்வர் பழனிசாமியிடம் செய்தியாளர்கள் ரஜினியின் கட்சி அறிவிப்பு குறித்துக் கேட்டபோது, “ரஜினி கட்சியைப் பதிவு செய்யட்டும். அதற்குப் பிறகு கேளுங்கள். அவர் அறிவிப்பு மட்டுமே செய்துள்ளார். ரஜினி, கட்சியைப் பதிவு செய்தவுடன் வந்து கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன். அதுதான் சரியாக இருக்கும். ஓபிஎஸ் அவரது கருத்தைச் சொல்லியிருக்கிறார். அனைவருக்கும் கருத்துச் சொல்ல உரிமை உள்ளது'' என்று தெரிவித்தார்.

ரஜினியின் கட்சி அறிவிப்பு விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், மூத்த அமைச்சரின் கருத்துகள் வெவ்வேறு விதமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x