

சட்டப் படிப்பில் அரியர் தேர்வுகளுக்கான கால அட்டவணை குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக அரியர் தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், அரியர் பாடங்களில் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறச் செய்யக்கூடாது என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சட்டப் படிப்பு மாணவர்களின் அரியர் தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும் என சட்டக்கல்லூரி மாணவர் சஞ்சய் காந்தி என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அகில இந்திய பார் கவுன்சில் தரப்பில், அரியர் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, பல்கலைக்கழகத் தரப்பிடம் அரியர் தேர்வு எப்போது நடத்தப்படும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு விளக்கம் அளித்த சட்டப் பல்கலைக்கழகம் தரப்பு, சட்டப் படிப்புகளில் அரியர் வைத்துள்ள பாடங்களுக்கான தேர்வு நடத்துவது தொடர்பான கால அட்டவணை குறித்து சிண்டிகேட் குழுவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான முடிவுகளைத் தெரிவிக்க அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
’