

தனியார் மயமாக்கத்துக்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதால் புதுச்சேரி மின்ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று திடீரென்று ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி மின்துறையைத் தனியார் மயமாக்க இருப்பதாக மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இதனைத் தடுத்து நிறுத்த மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி அரசு மின்துறையைத் தனியார் மயமாக்குவதை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தது.
இதனையடுத்து, மின்துறை ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், மின்துறையை கார்ப்பரேஷனாக மாற்றுவதற்கான அறிக்கையைத் தயாரித்துச் சமர்ப்பிக்கும்படி புதுச்சேரி அரசுக்குக் கோப்பு அனுப்பியுள்ளது.
அதன்படி, அறிக்கை தயாரித்து வழங்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுபற்றி அறிந்த மின்துறை ஊழியர்கள் இன்று (டிச.4) முதல் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் திடீரென்று ஈடுபட்டுள்ளனர்.
கனமழையின் காரணமாக புதுச்சேரியில் பல இடங்களில் மின்தடை நேற்று (டிச.3) இரவு முதல் ஏற்பட்டுள்ளது. இந்த மின்தடை மின்துறை ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக சீரமைக்கப்படாமல் இருந்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து, திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ இன்று மாலை வம்பாகீரப் பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலக வளாகத்துக்குச் சென்று தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இதுபற்றி சிவா எம்எல்ஏ கூறுகையில், "போராட்டம் நடத்துவதாக இருந்தால் மின்துறை ஊழியர்கள் ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் மின்துண்டிப்பு செய்து போராட்டம் மேற்கொள்ளலாம்.
அதைவிடுத்து மழையின்போது மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ள வீடுகளுக்கு மின் இணைப்புகளை வழங்க மறுத்து, ஏழை மக்களின் வீடுகளில் மின் தடை ஏற்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. உடனே மின் தடை ஏற்பட்டுள்ள இடங்களில் மின் இணைப்பை வழங்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மின்துறை அலுவலக வாயில் கதவைப் பூட்டி அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளரும் எம்எல்ஏவுமான அன்பழகன் தலைமையில் மின்துறை அலுவலகம் வெளியே போராட்டத்தைத் தொடங்கினர்.
இது தொடர்பாக அதிமுக எம்எல்ஏ அன்பழகன் கூறுகையில், "மழையால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் தெரிவித்தால் வேலைநிறுத்தத்தில் இருப்பதாகக் கூறி பணி செய்யவில்லை. அத்தியாவசியத் தேவை இது. மக்கள் பாதிக்கப்படுகின்றனர். உங்களுக்குக் கோபம் இருந்தால் முதல்வர், ஆளுநர் இல்ல வீடுகளின் மின் இணைப்பை நிறுத்துங்கள்.
பல பகுதிகளில் நேற்று இரவு முதல் மின் விநியோகம் இல்லை. வேலைநிறுத்தம் உங்கள் உரிமை. பொதுமக்களுக்குப் பாதிப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆதரவு தருவோம். தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.