

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக நேற்று சாரல் மழை பெய்தது. பாளையங்கோட்டையில் வீடு இடிந்ததில் ஒருவர் காயமடைந்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் புரெவி புயலின் தாக்கத்தால் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் இன்று பரவலாக சாரல் மழை பெய்தது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி சேரன்மகாதேவியில் 0.20 மி.மீ., பாளையங்கோட்டையில் 2.40 மி.மீ., திருநெல்வேலியில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பகல் முழுவதும் வெயில் தலைகாட்டாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அணைப்பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை என்பதால் அணைகளின் நீர்மட்டத்தில் பெரிய மாறுதல் இருக்கவில்லை.
பாபநாசம் அணை நீர்மட்டம் 122.95 அடி, சேர்வலாறு நீர்மட்டம் 129.46 அடி, மணிமுத்தாறு நீர்மட்டம்- 96.40 அடி, வடக்கு பச்சையாறு- 19 அடி, நம்பியாறு- 10.62 அடி, கொடுமுடியாறு- 34.50 அடியாக இருந்தது.
பாளையங்கோட்டையில் மழைக்கு வீடு இடிந்தது. பாளையங்கோட்டை மூர்த்திநாயனார் தெருவை சேர்ந்தவர் இருதயராஜ் (70). இவர் தனது மனைவி வேலம்மாளுடன் அதிகாலையில் வீட்டில் இருந்தபோது திடீரென்று வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்தது. இதில் இருதயராஜ் காயமடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு படையினர் அங்குசென்று இருதயராஜை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் பேரிடர் மீட்பு பணிகளுக்காக பாளையங்கோட்டை ஆயுதப்படையில் 37 ஆயுதப்படை காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணனின் உத்தரவுப்படி ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் 37 காவலர்களும் பேரிடர்கள் நேர்ந்தால் அங்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டியிருக்கிறார்கள். பொட்டல் பகுதியில் டிராடர்கள் மூலம் நிலத்தை பண்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது