

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு எதிராக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் ஆளுநரும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழுவுக்கு தடை விதிக்கக்கோரி குமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த மணிதனிகை குமார், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘பல்கலைக்கழக சேவை தொடர்பான வழக்கு. இதனை பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுக்க முடியாது என்றார்.
இந்த வழக்கில் தன்னையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கக்கோரி துணை வேந்தர் சூரப்பா மனு தாக்கல் செய்திருந்தார்.
பின்னர் நீதிபதிகள், அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி இந்த விவகாரத்தில் பல்கலைக்கழங்களின் வேந்தரானா ஆளுநரும், தமிழக அரசும் உரிய முடிவெடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது என்று கூறி விசாரணையை டிச.9-க்கு ஒத்திவைத்தனர்.