Last Updated : 04 Dec, 2020 06:18 PM

 

Published : 04 Dec 2020 06:18 PM
Last Updated : 04 Dec 2020 06:18 PM

குற்றச்சம்பவங்கள் தொடர்பாக புகாருக்காகக் காத்திருக்காமல் ஊடக செய்திகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

குற்றச் செயல்கள் தொடர்பாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியானால் போலீஸார் புகாருக்காகக் காத்திருக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சங்கரன்கோவில் அருகே சில்லிகுளத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் மணிமுத்தாறு பட்டாலியனில் காவலராக பணிபுரிகிறார். இவர் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் நரிக்குறவர் பெண்களிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.

அங்கிருந்தவர்கள் ராமச்சந்திரன் பிடியிலிருந்து நரிக்குறவர் பெண்களை காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து நேற்று விசாரணைக்கு எடுத்தது. இதனை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், பொது இடங்களில் பெண்களிடம் போலீஸார் தவறாக நடந்து கொள்வதை ஏற்க முடியாது. அந்த காவலர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க வேண்டும் என்றனர்.

தொடர்ந்து நீதிபதிகள், பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகும் சமூகவிரோத செயல்கள் தொடர்பாக போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை.

கேட்டால் யாரும் புகார் அளிக்கவில்லை என்பார்கள். இதுபோன்ற சம்பவங்களில் புகார் அளிக்க யாரும் முன்வரமாட்டார்கள். இதனால் போலீஸார் புகாருக்காக காத்திருக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x