மழை வெள்ளத்தில் 25 லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கியுள்ளன; நிவாரணம் தேவை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் 

மழை வெள்ளத்தில் 25 லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கியுள்ளன; நிவாரணம் தேவை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் 
Updated on
1 min read

தமிழகத்தில் கடந்த இரு தினங்களாகப் பெய்து வரும் கனமழை மற்றும் அதீத கனமழையால் ஏற்பட்டுள்ள விவசாயப் பாதிப்பினைத் தமிழக அரசு ஆய்வு செய்து விவசாயிகள் அடைந்துள்ள நஷ்டத்தினை ஈடுசெய்யும் வகையில் நிவாரண உதவிகள் செய்திட வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்தும், புரெவி புயல் காரணமாகவும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த இரண்டு நாட்களாகத் தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழை, கனமழை மற்றும் அதீத கனமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாகக் கடலோரம் மற்றும் டெல்டா பகுதிகளில் விவசாயம் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை உள்பட தென் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் விவசாய நிலப் பகுதிகளில் பெய்த கனமழையால் விளைபயிர்கள் அதிக அளவில் சேதமுற்றுப் பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது தமிழகம் முழுவதும் சென்னை உள்பட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பல மாவட்டப் பகுதிகளில் சுமார் 25 லட்சம் ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட விவசாயப் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளில் மட்டும் சுமார் 10 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட விவசாயப் பயிர்கள் பெருமளவு மழையால் சேதம் அடைந்துள்ளன. மிக முக்கியமாக நெற்பயிர், வாழை, தென்னை போன்றவை முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படி சம்பா பயிர்கள், தாளடிப் பயிர்கள் புயல் மழையால் சாய்ந்தும், மூழ்கியும், சேதமுற்றும் வீணாகிவிட்டது. இதுவரையில் புரெவி புயல் பாதித்த பகுதிகளில் விவசாயம் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, தமிழகத்தில் நிவர் புயலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள புரெவி புயல் காரணமாக பெய்த அதீத கனமழை, காற்று ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள விவசாயப் பாதிப்புகள் விவசாயிகளைப் பெருத்த நஷ்டத்திற்கு உட்படுத்தியிருக்கிறது. இச்சூழலில் தமிழக அரசு மாநிலம் முழுவதும் டெல்டா மாவட்டம் உள்பட அனைத்து மாவட்டப் பகுதிகளிலும் விவசாய நிலங்களை ஆய்வு செய்து பாதிப்பைச் சரியாகக் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படிக் கணக்கீடு செய்த பிறகு பாதிப்புக்கு ஏற்ப விவசாயிகள் அடைந்த நஷ்டத்தினை ஈடு செய்யும் வகையில் நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டும். எனவே, தமிழக அரசு புரெவி புயல் பாதிப்பால் விவசாயிகள் அடைந்துள்ள இழப்புக்கு உரிய நிவாரணம் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுத்து விவசாயிகள் நலன் காக்க வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in