Published : 04 Dec 2020 06:16 PM
Last Updated : 04 Dec 2020 06:16 PM

திருப்பூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 10 ஆண்டுகளுக்கு முன் பதவி வகித்த ஆட்சியர் பெயர்: மார்க்சிஸ்ட் கட்சி புகார்

வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற 10 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி மற்றும் குடும்பத்தினர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில், 10 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய முன்னாள் ஆட்சியர் மற்றும் மாற்றலாகிச் சென்ற மற்றொரு ஆட்சியர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெயர் இடம்பெற்றுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் 2009-ம் ஆண்டு உருவானது. அப்போது, இங்கு ஆட்சியராகப் பணியாற்றியவர் சமயமூர்த்தி. அதன்பின்னர் அவர் பதவி உயர்வு பெற்று சென்னை சென்றார். தற்போதைய ஆட்சியருக்கு முன்பாகப் பணியாற்றிய கே.எஸ்.பழனிசாமி ஆகியோரின் பெயர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் கடந்த நவ. 16-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற 10 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய ஆட்சியர் சமயமூர்த்தி மற்றும் குடும்பத்தினர்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலருமான என்.கோபாலகிருஷ்ணன் கூறுகையில், "திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் 10 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பூர் மாவட்டத்தை வரையறை செய்வதற்காக நியமிக்கப்பட்டவரும், மாவட்டத்தின் முதல் ஆட்சியருமான சமயமூர்த்தி மற்றும் அவரது மனைவி தீபிகா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்ட ஆட்சியராக இருந்த கே.எஸ்.பழனிசாமி மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோரின் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக வாக்காளர் பட்டியல் திருத்தப்படாமல் உள்ளதோ என்கிற சந்தேகம் எழுகிறது. மாவட்டத் தேர்தல் அலுவலர்களாக மாவட்ட ஆட்சியர்களே இருக்கும்போது, அவர்கள் இடம் மாறும்போது பெயர்களும் மாற்றப்பட வேண்டும்.

திருப்பூரில் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் கூட, கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குநரும், திருப்பூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்பார்வையாளருமான மு.கருணாகரன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளைக் கள ஆய்வு செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

எத்தனை முறை அரசியல் கட்சிகள் வலியுறுத்தினாலும், தேர்தல் பணிகளை முறையாக அலுவலர்கள் செய்வதில்லை என்பதற்கு இதுவே ஒரு சான்று. தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை முழுமையாக மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

பழைய அதிகாரிகள் மட்டுமின்றி, தொகுதியில் இல்லாத பொதுமக்களின் பெயரை நீக்க வேண்டும். உரிய முறையில் கள ஆய்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக கோட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளோம்" என்றார்.

திருப்பூர் மாவட்டத் தேர்தல் வட்டாட்சியர் ரவீந்திரன் கூறுகையில், "பழைய ஆட்சியர்கள் பெயர் இடம்பெற்றது தொடர்பாக, இதுவரை எனக்கு எதுவும் புகார் வரவில்லை. கட்சியினர் கோட்டாட்சியரிடம் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாகக் கேட்கிறேன்" என்றார்.

திருப்பூர் கோட்டாட்சியர் ஜெகநாதன் 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறுகையில், "ஆட்சியர் பெயர் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகக் கட்சியினர் தெரிவித்தனர். அனைவரிடமும் படிவம் 7 பெற்று முறைப்படி நீக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆய்வு செய்து பெயர்கள் நீக்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x