Published : 04 Dec 2020 06:09 PM
Last Updated : 04 Dec 2020 06:09 PM

மழை வெள்ளப் பாதிப்பு; போர்க்கால அடிப்படையில் அரசு இயங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை

அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரி செய்யவும், தொடர்மழை நீடிக்கும் பகுதிகளில் நிலைமை மோசமாகாமல் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“வங்கக் கடலில் உருவான புரெவி புயல் வலுவிழந்துவிட்ட போதிலும், அதன் காரணமாகத் தொடர்ந்து பெய்து வரும் மழையால், காவிரிப் பாசன மாவட்டங்களிலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில், நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்படும் ஆபத்தும் அதிகரித்திருப்பதால் நிலைமையைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களைத் தாக்கிய நிவர் புயலைச் சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டிருந்ததால், அப்புயல் காரணமாகப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தென்மாவட்டங்களைத் தாக்கும் என்று அஞ்சப்பட்ட புரெவி புயலைச் சமாளிக்கவும் அரசு விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. ஆனால், அவற்றையும் கடந்து புரெவி புயல் மற்றும் மழையால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

புரெவி புயலால் தென் மாவட்டங்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படும், காவிரிப் பாசன மாவட்டங்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காவிரிப் பாசன மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மிகக்கடுமையான மழை பெய்திருக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 செ.மீ. அளவுக்கும், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 33 செ.மீ. அளவுக்கும் மழை பெய்துள்ளது.

பலத்த மழை காரணமாக சிதம்பரம் நடராசர் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மட்டும் தொடர் மழை காரணமாக 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. கும்பகோணம் அருகே வீட்டின் சுவர் விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மழை தொடர்பான விபத்துகளில் மட்டும் 6 பேர் உயிரிழந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தொடர் மழையால் கடலூர், விழுப்புரம் மற்றும் காவிரிப் பாசன மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் மூழ்கியுள்ளன. பயிர்களைச் சூழ்ந்துள்ள நீர் வெளியேற்றப்படாவிட்டால் பயிர்கள் அழுகும் ஆபத்துள்ளது.

தொடர்மழையால் நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான பெருமாள் ஏரி நிரம்பி வழிவதால், வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வீராணம் ஏரியும் நிரம்பி வழிகிறது. இதேநிலை இன்னும் சில மணி நேரத்திற்குத் தொடர்ந்தால் கடலூர் மாவட்டம் வெள்ளக் காடாகி, மிக மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

கடந்த வாரம் தாக்கிய நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து கடலூர் மாவட்டம் இன்னும் மீளாத நிலையில், புரெவி புயலின் பாதிப்புகள் கடலூர் மாவட்டத்தை நிலைகுலையச் செய்திருக்கிறது. மழை நீடித்தால் கடலூர் மாவட்டத்தில் சமாளிக்க முடியாத அளவுக்கு பேரழிவுகள் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் இரு நாட்களாகப் பெய்து வரும் மழையால் ஏராளமான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையை ஒட்டியுள்ள ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி ஆகியவை நிரம்பி விட்டதால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்து வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும்.

ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களும் மழையால் மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் வலுவிழந்த நிலையில் தொடர்ந்து கடலில் நிலை கொண்டிருப்பதால் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரி செய்யவும், தொடர்மழை நீடிக்கும் பகுதிகளில் நிலைமை மோசமாகாமல் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

சேதமடைந்த பயிர்கள், வீடுகள் உள்ளிட்ட பொதுமக்களின் அனைத்து உடைமைகளுக்கும் இழப்பீடு வழங்கவும், வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். புயல் பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான உதவிகளை வழங்குவதாக பிரதமர் உறுதியளித்துள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து விரைவாக நிதியுதவி பெற்று நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x