Last Updated : 04 Dec, 2020 05:20 PM

 

Published : 04 Dec 2020 05:20 PM
Last Updated : 04 Dec 2020 05:20 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் மிதமான மழை: தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி- சிறப்பு கண்காணிப்பு அதிகாரி, ஆட்சியர் நேரில் ஆய்வு

படங்கள்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மிதமான மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாநகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மாநகராட்சி சார்பில் ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சிறப்பு கண்காணிப்பு அதிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் இலங்கையின் தலைமன்னார் பகுதியில் கரையை கடந்து நேற்று மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு வந்தது.

தொடர்ந்து அது வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருந்தது. இன்று மாலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே பகுதியில் நிலை கொண்டிருந்தது.

தொடர்ந்து இது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நகரக் கூடும் என்றும், தொடர்ந்த மேலும் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியதாக மாறி மெதுவாக மேற்கு தென்மேற்காக நகர்ந்து கேரள பகுதியை அடையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் அனைத்து துறைகளும் உஷார்படுத்தப்பட்டு முழு அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு கனமழை பெய்யவில்லை. பலத்த காற்றும் வீசவில்லை. இருப்பினும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்றும் 6-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மாவட்டத்தில் உள்ள 423 விசைப்படகுகளும், 4300 நாட்டுப்படகுகளும் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன. மேலும், புரெவி புயல் வலுவிழந்ததை தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஏற்றப்பட்ட 6-ம் எண் எச்சரிக்கை கூண்டு இன்று 3-ம் எண்ணாக குறைக்கப்பட்டது.

புரெவி புயலின் தாக்கம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் லேசான துறல் மழை பெய்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்தது. 1 மணி நேரத்துக்கும் மேலாக இந்த மழை நீடித்தது. அதன் பிறகு இன்று பகலில் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் மழை ஏதும் பெய்யவில்லை.

அதிகாலை பெய்த மழை காரணமாக தூத்துக்குடி நகரில் வழக்கம் போல தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக பிரையண்ட் நகர், தபால் தந்தி காலனி, லூர்தம்மாள்புரம், பூபாலராயர்புரம், பழைய மாநகராட்சி அலுவலக பகுதி, ஜார்ஜ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.

மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மாநகர பகுதி முழுவதும் 120 ராட்சத மோட்டார்கள் மற்றும் 8 டேங்கர் லாரிகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் தலைமையிலான அதிகாரிகள் அதிகாலை 5 மணி முதல் நேரடியாக சென்று மழைநீரை வெளியேற்றும் பணிகளை முடுக்கிவிட்டனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரியான அரசு முதன்மை செயலர் குமார் ஜெயந்த் தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி தபால் தந்தி காலனி, பிரையண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர், மழைநீரை வெளியேற்றும் பணிகளை விரைந்து செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வரும் மழை வெள்ள வடிநீர் கால்வாய் பணிகள், கோரம்பள்ளம் பொதுப்பணித்துறை கண்மாய் போன்றவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜித் சிங் கலோன், மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மக்கனி, வட்டாட்சியர் ஜஸ்டின் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):

திருச்செந்தூர் 24, காயல்பட்டினம் 30, விளாத்திகுளம் 12, வைப்பார் 33, சூரன்குடி 31, கோவில்பட்டி 3.5, கயத்தாறு 1, கடம்பூர் 4, ஓட்டப்பிடாரம் 5, மணியாச்சி 5, வேடநத்தம் 12, கீழஅரசடி 9, எட்டயபுரம் 9, ஸ்ரீவைகுண்டம் 1, தூத்துக்குடி 29.6 மி.மீ. மழை பெய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x