

சபரிமலைக்குச் செல்ல ஆன்லைன் டிக்கெட் எடுக்க முடியாமல் தமிழக ஐயப்ப பக்தர்கள் திண்டாடி வருகின்றனர்.
தமிழக பக்தர்கள் வசதிக்காக ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வசதியை மீண்டும் ஒரு முறை திறக்க கேரள அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல மகரவிளக்கு கால பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. நவம்பர் 17-ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் பல கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை உள்ள ஐந்து நாட்கள் தினமும் ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்களும், மகரவிளக்கு அன்று 5,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என முதலில் அறிவிக்கப்பட்டது.
இதற்கான ஆன்லைன் புக்கிங் கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கியது. புக்கிங் தொடங்கிய 2 மணி நேரத்தில் அனைத்து நாள்களுக்குமான டிக்கெட்டுகள் முழுவதும் புக்கானது. இதனால் வேறு பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் சபரிமலையில் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேரள அரசிடம் முன்வைத்தது.
இதையடுத்து தினமும் கூடுதலாக 1,000 பக்தர்களை அனுமதிக்க கேரளா அரசு அனுமதி அளித்தது.
அதாவது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை உள்ள ஐந்து நாள்கள் தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என, கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்தார்.
இதையடுத்து கூடுதல் பக்தர்களை அனுமதிப்பதற்கான ஆன்லைன் புக்கிங் டிசம்பர் 2-ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கியது.
இந்த கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கான புக்கிங்கிலும் தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலான பக்தர்களால் டிக்கெட் புக்கிங் செய்ய முடியவில்லை. சபரிமலை கோயிலுக்கு ஆண்டு தோறும் தமிழகத்தில் இருந்து தான் அதிகபடியான பக்தர்கள் செல்வார்கள்.
ஆனால், இந்த ஆண்டு தமிழக பக்தர்கள் பெரும்பாலானோருக்கு ஆன்லைன் டிக்கெட் கிடைக்காததால் கடுமையாக திணறி வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் மாலை அணிந்த பல பக்தர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திணரி வருகின்றனர். பலர் உள்ளூர்களில் உள்ள ஐயப்பன் கோயில்களிலேயே வழிபட முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த ஐயப்ப பக்தரான பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணி நிர்வாகி எஸ்.சிவராமன் கூறும்போது, நான் கடந்த 22 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வருகிறேன். இந்த ஆண்டு எனக்கு நவம்பர் 1-ம் தேதியே மிகவும் கஷ்டப்பட்டு டிக்கெட் புக்கிங் செய்துவிட்டேன். ஆனால், எனது குழுவையை சேர்ந்தவர்களுக்கு புக்கிங் செய்யவில்லை.
இந்நிலையில் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கான டிக்கெட் புக்கிங் கடந்த 2-ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கியது. அந்த நேரத்தில் இருந்து மறுநாள் அதிகாலை 2 மணி வரை முயற்சி செய்தும் எந்த டிக்கெட்டும் புக்கிங் செய்ய முடியவில்லை.
ஆன்லைன் புக்கிங் சர்வர் மிகவும் மெதுவாக இருந்ததால் டிக்கெட் புக்கிங் செய்ய முடியவில்லை. ஆனால் அதற்குப் பிறகு முயற்சி செய்தால் அனைத்து டிக்கெட்டுகளும் புக்காகிவிட்டதாக இணையதளத்தில் காண்பிக்கிறது.
இதனால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆன்லைன் டிக்கெட் கிடைக்காததால் சபரிமலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மாலை அணிந்த பக்தர்கள் கடும் மனவேதனை அடைந்துள்ளனர். எனவே, தமிழக பக்தர்களின் வசதிக்காக இணையதள சர்வரை சரி செய்து, ஆன்லைன் புக்கிங் வசதியை மீண்டும் ஒருமுறை திறந்துவிட கேரளா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.