Last Updated : 04 Dec, 2020 04:23 PM

 

Published : 04 Dec 2020 04:23 PM
Last Updated : 04 Dec 2020 04:23 PM

காரைக்காலில் கனமழை; தாழ்வான இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான இடங்களில் நீர் தேங்கி, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வங்கக் கடலில் உருவான புரெவி புயல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் டிச.2-ம் தேதி இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்தது. காரைக்கால் நகரம், கோட்டுச்சேரி, நெடுங்காடு, வரிச்சிக்குடி, திருநள்ளாறு, திருமலைராயன்பட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நேற்று (டிச. 03) இரவு முதல் இடைவிடாமல் தொடர்ந்து கன மழை பெய்தது. இன்று (டிச. 4) மாலை வரையிலும் இதே நிலையே நீடித்தது.

தாழ்வான இடங்களிலும், சில குடியிருப்புப் பகுதிகளிலும், பல்வேறு பகுதிகளில் சாலைகளிலும் நீர் தேங்கிக் காணப்பட்டது. திருநள்ளாறு அரங்கநகர், சுரக்குடி, காரைக்கால் நகரப் பகுதியில் திருநகர், பெரிய பேட் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருநள்ளாறு நெய்வாச்சேரி பகுதியிலும், அரங்கநகர் பகுதியிலும் தலா ஒரு குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அரங்கநகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. சுரக்குடி தீயணைப்பு நிலையம் எதிரில் 3 மின் கம்பங்கள் விழுந்தன. அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டதால், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்தன. அவற்றை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெட்டி அகற்றினர். தாழ்வான மற்றும் கடலோரப் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைளில் ஈடுபட்டனர். மழை நீர் தேங்கிய குடியிருப்புப் பகுதிகளில் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் பயிர்கள் பாதிக்கும் வகையில் விளை நிலங்களில் நீர் தேங்கிக் காணப்படுகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் தொடர்ந்து 13-வது நாளாக தொழிலுக்கு செல்லவில்லை. 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் செயல்பட்டு வந்த நிலையில் இன்று 2-வது நாளாக மாவட்ட நிர்வாகத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

காரைக்காலில் இன்று காலை 8.30 மணி வரை 72.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் ஆகியோர் திருநள்ளாறு, சுரக்குடி, கோட்டுச்சேரி மேடு, கீழக்காசாக்குடி, திருவேட்டக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மழையின் பாதிப்புகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருநள்ளாறு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் மற்றும் அதிகாரிகள்.

இடிந்து விழுந்த வீடுகளை பார்வையிட்ட ஆட்சியர், உரிய நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மின்சாரம் இல்லாமல் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்ட சுரக்குடி பகுதியில் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய உத்தரவிட்டார்.

திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரவி, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் செல்வம், வட்டாட்சியர் பொய்யாத மூர்த்தி மற்றும் தொடர்புடைய துறைகளின் அதிகாரிகள் உடன் சென்றனர்.

புதுச்சேரி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.ஏ.யு.அசனா, கீதா ஆனந்தன் ஆகியோர் தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழை பாதிப்புகள் குறித்து பார்வையிட்டு, பொதுமக்களை சந்தித்து பாதிப்புகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x