

கரோனா குறித்த அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் பிரதமரிடம் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை முடித்துவைக்க டி.ஆர்.பாலு வேண்டுகோள் வைக்க அவரது பேச்சை மத்திய அமைச்சர் ஆட்சேபிக்க கூட்டத்தில் அமைச்சர் இந்தியில் பேசியது குறித்து அமைச்சருக்கும், டி.ஆர்.பாலுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து திமுக சார்பில் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
“இறுதியாக, பிரதமரின் கவனத்திற்குத் தலைநகர் டெல்லியில் பல நாட்களாக உறைய வைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வெட்ட வெளியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகள் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து குவிந்துள்ளனர். முதியோர், வயது முதிர்ந்த தாய்மார்கள் எனக் கண்பார்வை செல்லும் இடமெல்லாம் நிறைந்து போராடி வரும் வரும் இவர்கள் கோரிக்கை உங்களுக்குத் தெரியாததல்ல.
அண்மையில் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயப் பெருமக்களுக்கு எவ்வித நன்மைகள் பயக்காது என்பதால் அவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் ஒரே கோரிக்கை. 130 கோடி மக்களுக்கு உணவு வழங்கிடும் நாட்டின் விவசாயிகளை இதுபோன்ற கடுங்குளிரில் நாட்கணக்கில் போராட வைப்பது கொஞ்சமும் நியாயம் அல்ல. ஆகவே, பிரதமர் அவர்கள் போராடும் விவசாயிகளை உடனடியாக அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும்.
விவசாயிகள் பிரச்சினை பற்றி டி.ஆர்.பாலு பேசியதற்கு நாடாளுமன்ற துறை அமைச்சர் ஆட்சேபம் தெரிவித்ததுடன் விவசாயிகள் தொடர்பாகப் பேசக் கூடாது என்று கூறினார். இதற்குக் கடுமையான கண்டனக் குரலை எழுப்பிய டி.ஆர்.பாலு, கூட்டத்தின் துவக்கத்தில் அமைச்சரும் செயலாளரும் முழுக்க முழுக்க இந்தியில் பேசியதையும் உரிய ஆங்கில மொழி மாற்றம் ஏற்பாடு செய்யப்படாதது குறித்தும் தனது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினார்”.
இவ்வாறு திமுக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.