புதுச்சேரியில் நடைமுறைக்கு வராத ரூ.11 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் முக்கிய சாலைகளில் வெள்ளம்; துணைநிலை ஆளுநர், முதல்வர் போட்டோவுக்கு மட்டுமே போஸ்: துணை சபாநாயகர் காட்டம்

புதுச்சேரி இந்திரா காந்தி சிலை ரவுண்டானா அருகே வெள்ள நீர் சூழ்ந்து நான்கு பகுதி சாலைகளிலும் ஓடுவதால் அதில் மிதந்து செல்லும் வாகனங்கள், கடக்கும் பொதுமக்கள். படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி இந்திரா காந்தி சிலை ரவுண்டானா அருகே வெள்ள நீர் சூழ்ந்து நான்கு பகுதி சாலைகளிலும் ஓடுவதால் அதில் மிதந்து செல்லும் வாகனங்கள், கடக்கும் பொதுமக்கள். படம்: எம்.சாம்ராஜ்
Updated on
1 min read

மழை பொழியும் போதெல்லாம் புதுச்சேரியின் முக்கியப்பகுதியான இந்திரா காந்தி சிலையருகே தேங்கும் மழைநீரால் அப்பகுதியெங்கும் வெள்ளக்காடாகிறது.

விழுப்புரம், கடலூர், திண்டிவனம் வழியாக வருவோர் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். ரூ.11 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடைமுறைக்கு வராததே இதற்கு காரணம். ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் போட்டாவுக்கு போஸ் மட்டுமே தருவதாக துணை சபாநாயகர் பாலன் காட்டமாக தெரிவித்தார்.

புதுச்சேரியில் நிவர் புயல் காரணமாக, கனமழை பொழிவால் நகரின் முக்கியப்பகுதியான இந்திரா காந்தி சிலையுள்ள சிக்னலில் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. விழுப்புரம், கடலுார், திண்டிவனம், நெல்லித்தோப்பு என 4 திசை சாலைகளிலும் தண்ணீர் தேங்கி நின்றதால், வாகனங்கள் மிதந்தபடி சென்றது. இந்த காட்சிகள், ஒவ்வொரு மழைக்கும் இங்கு பதிவாகிறது

தற்போதைய புரெவி புயலால் மீண்டும் இப்பகுதி வெள்ளக்காடானது. அதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக இப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, "தண்ணீர் தேங்க முக்கியக்காரணம் கடந்த காலங்களில் விவசாய பாசனத்திற்காக ஊசுட்டேரியில் இருந்து அமைக்கப்பட்ட பள்ள வாய்க்கால், மேட்டு வாய்க்கால் ஆகியவை, ஆக்கிரமிப்புகளால் அதன் அகலம் குறுகியது.

இதனால் ஒவ்வொரு ஆண்டு மழையின்போதும் இந்திரா காந்தி சிலை சிக்னல், பூமியான்பேட்டை பகுதியில் மழைநீர் சூழ்ந்து கொள்கிறது. மழைநீர் தேங்கி நின்றால் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டு செல்வார்கள். அதன்பிறகு கண்டுகொள்வதில்லை.

மழைநீர் தேங்கும் பிரச்சினையால் இந்திராகாந்தி சிலை சிக்னலில் மழை நீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.11 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணி செய்ய திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால், நடைமுறைக்கே வரவில்லை" என்று குற்றம்சாட்டுகின்றனர்.

"போட்டோவுக்கு மட்டும் போஸ்" - துணை சபாநாயகர் பாலன் காட்டம்

துணை சபாநாயகர் பாலன்
துணை சபாநாயகர் பாலன்

புதுச்சேரியில் பல பகுதிகளில் மக்கள் இம்முறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி, துணை சபாநாயகர் பாலன் கூறுகையில், "ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு வந்து வேடிக்கை பார்த்து புகைப்படம் எடுக்கிறார்கள். இது தவிர, பிரச்சினைகளுக்கு தொலைநோக்குடன் தீர்வு காண நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை. அதற்கான பணிகளில் இறங்குவதும் இல்லை" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in