

அமுகவுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கைப் பொறுக்க முடியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் புலம்பி வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
மதுரை மாநகராட்சிக்கு ரூ.1,205 கோடியில் நிறைவேற்றப்படும் முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் கே.பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
விழாவில் முதல்வரைத் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:
தமிழக மக்களுக்கு தடையற்ற குடிநீர் வழங்கவேண்டும் என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு. அந்தக் கனவை முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. தாயின் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கும் தனையனாக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்.
இன்றைக்கு, ரூ.1,205 கோடியில் முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனால், மதுரை மாநகரின் குடிநீர் தேவை நிறைவடையும். மக்களின் தேவைகளை, அமைச்சர்கள் துறை வாயிலாக நிறைவேற்றி வருகின்றனர். இதனால், மக்கள் மத்தியில் அதிமுக செல்வாக்கு பெற்றுள்ளது. மக்கள் செல்வாக்கு அதிமுகவுக்கு பெருகுவதை ஸ்டாலினால் பொறுக்க முடியாமல் புலம்புகிறார். அவருக்கு மக்களை நேரில் சந்திக்க பயம். ஆகையால், பூட்டிய அறையில் இருந்து பேசுகிறார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையைப் பெற்றவர் ஜெயலலிதா. காவிரி நடுவர் மன்றம் தீர்ப்புக்கு அரசாணை பெற்றுத் தந்தார். அரசாணை பெற்ற நாள் தான் மகிழ்ச்சியான நாள் என்றார். தமிழகத்தின் உரிமைகளை பெற்றுத்தருபவராக அவர் இருந்தார்.
ஆனால், மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்டார் ஸ்டாலின். தஞ்சை தரணியை பாலைவனமாக்க கையெழுத்திட்டவர் அவர். வசாயிகளின் எதிரி யார் என்பது விவசாயிகளுக்குத் தெரியும். கரும்புத் தோட்டத்தில் சிமென் ட் சாலை அமைத்துச் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தவர். அவரின் கனவு பலிக்காது. அம்மாவின் கனவுகளை நனவாக்கும் ஆட்சி நடத்தும் அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு என்றும் உண்டு.
இவ்வாறு அவர் பேசினார்.