காரைக்காலில் மத்திய அரசைக் கண்டித்து கொட்டும் மழையில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காரைக்கால் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்கள்.
காரைக்கால் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்கள்.
Updated on
1 min read

மின்துறையைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்தும், புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்தும் காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தனியார்மய எதிர்ப்புப் போராட்டக் குழு நிர்வாகிகள் வேலுமயில், பழனி ஆகியோர் தலைமை வகித்தனர்.

யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இம்முடிவை கைவிடக் கோரியும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின்துறை ஊழியர்கள் தொடர்ந்து பலகட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தனியார் மயமாக்குவதற்கான செயல்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மின்துறை ஊழியர்கள் இன்று (டிச.4) கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், "மத்திய அரசின் முடிவை எதிர்த்துப் புதுச்சேரி முழுவதும் மின்துறை ஊழியர்கள், அதிகாரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் எங்கள் போராட்டத்தைப் பொருட்படுத்தாமல், ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து, பல கோப்புகளை அனுப்பி தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

மத்திய அரசு இம்முடிவை திரும்பப் பெற வலியுறுத்தியும், துணைநிலை ஆளுநரைக் கண்டித்தும், இந்த நடவடிக்கைகளை அவர் திரும்பப் பெறும் வரையும் எங்கள் போராட்டம் தீவிரமாக இருக்கும். வரும் 7-ம் தேதி முதல் போராட்டத்தைத் தீவிரப்படுத்தவுள்ளோம்" என்று தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in